ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கேஜரிவால் பொய் மற்றும் வஞ்சக அரசியல் செய்வதாக பாஜக தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷா தெரிவித்துள்ளார்.
தில்லியில் வருகிற பிப். 5 அன்று சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், பாஜக மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷா இன்று ராஜோரி கார்டன் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அதில் பேசிய அவர், ‘’தில்லியில் ஏழைகளுக்கான எந்தவொரு நலத்திட்டமும் நிறுத்தப்படாது என்று பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். ஆனால், அரவிந்த் கேஜரிவால் பொய்களைப் பரப்புகிறார். அவரின் கட்சியினர் மக்களை தவறாக வழிநடத்துகிறார்கள். ஏழைகளின் நலனுக்கான எந்தவொரு திட்டத்தையும் பாஜக நிறுத்தாது என்பதை நான் மீண்டும் உறுதியளிக்கிறேன்.
ஆம் ஆத்மி அரசு தனது 10 ஆண்டு கால ஆட்சிக் காலத்தில் தில்லி மக்களுக்கு துரோகம் இழைத்ததைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை. டிடிசி பேருந்து ஊழல், ஸ்மார்ட் வகுப்பறை ஊழல், சிசிடிவி ஊழல் போன்ற பல ஊழல்கள் ஆம் ஆத்மி அரசின் ஆட்சியில் நடந்தன.
புதிய மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளைத் திறப்பதற்கும், யமுனை நதியை சுத்தம் செய்வதற்கும் ஒதுக்கப்பட்ட பொதுப் பணத்தை மோசடி செய்து வீணடித்துள்ளனர். எந்த அரசு பங்களாவையும் ஏற்க மாட்டேன் என்று கூறி அரசியலுக்கு வந்த கெஜ்ரிவால், தனக்கென ரூ.52 கோடி மதிப்புள்ள 'ஷீஷ் மஹால்' ஒன்றைக் கட்டிக் கொண்டார். ஊழல் இல்லாத தில்லியை உருவாக்குவதாக கேஜரிவால் உறுதியளித்தார். ஆனால் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள மதுபான ஊழலில் ஈடுபட்டார். மேலும், குடியிருப்புப் பகுதிகளில் உள்ள மதுபானக் கடைகளை மூடுவதாக கேஜரிவால் உறுதியளித்தார். ஆனால், பள்ளிகள், மதத் தலங்களுக்கு அருகில் அவற்றைத் திறந்தார். ஊழல் விவகாரத்தில் பிரதமர் மோடி கடுமையாகச் செயல்பட்டதால் கேஜரிவாலையும் அவரது அமைச்சர்களையும் சிறையில் அடைத்தார்" என்று அமித்ஷா குற்றச்சாட்டு வைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.