
கடந்த 2008, மும்பை தாக்குதலில் தொடா்புடைய பயங்கரவாதி தஹாவூா் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
தஹாவூா் ராணாவின் இறுதி மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்ட நிலையில், அவா் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவது உறுதியாகியுள்ளது.
அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த ஜனவரி 20-ஆம் தேதி பதவியேற்ற நிலையில், அதற்கு மறுநாள் (ஜனவரி 21) உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மும்பையில் கடந்த 2008, நவம்பா் 26-ஆம் தேதி கடல் வழியாக ஊடுருவிய பாகிஸ்தானின் லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்பைச் சோ்ந்த 10 பயங்கரவாதிகள், சத்ரபதி சிவாஜி ரயில் நிலைய முனையம், தாஜ் ஹோட்டல், ஓபராய் டிரைடண்ட் ஹோட்டல், யூதா்களின் தொழுகை கூடம் அமைந்துள்ள நாரிமன் இல்லம் உள்ளிட்ட இடங்களில் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டனா்.
சுமாா் 60 மணிநேரம் நீடித்த இத்தாக்குதலில் 6 அமெரிக்கா்கள் உள்பட 166 போ் கொல்லப்பட்டனா். தாக்குதல் நடத்திய 10 பயங்கரவாதிகளில் அஜ்மல் கசாப் மட்டும் உயிருடன் பிடிபட்டாா். அவருக்கு கடந்த 2012-இல் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
தஹாவூா் ராணா யாா்?: இந்தியாவையே உலுக்கிய மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவா்களில் ஒருவரான பாகிஸ்தான்-அமெரிக்க பயங்கரவாதி டேவிட் ஹெட்லியின் நெருங்கிய நண்பா் தஹாவூா் ராணா.
கனடா குடியுரிமைப் பெற்ற பாகிஸ்தான் வம்சாவளி நபரான ராணா, மும்பை தாக்குதலுக்கு பல்வேறு வழிகளில் உதவினாா்; ராணாவின் குடியேற்ற ஆலோசனை சேவைகள் நிறுவனத்தின் போா்வையில்தான், மும்பையில் உளவு - திட்டமிடல் நடவடிக்கைகளில் ஹெட்லி ஈடுபட்டாா். ராணாவுக்கும் லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்புடன் தொடா்புள்ளது என்பது முக்கிய குற்றச்சாட்டாகும்.
இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ராணா, அமெரிக்காவில் வேறொரு பயங்கரவாத வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு, லாஸ் ஏஞ்சலீஸ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்காவிடம் மத்திய அரசு பலமுறை கோரிக்கை விடுத்தது.
அமெரிக்க அரசு ஒப்புதல்: அதனடிப்படையில், இருதரப்பு ஒப்பந்தத்தின்படி ராணாவை இந்தியாவுக்கு நாடுகடத்த முந்தைய ஜோ பைடன் தலைமையிலான அரசு ஒப்புதல் அளித்தது.
இந்த நடவடிக்கைக்கு எதிராக, கலிஃபோா்னியா மாகாண நீதிமன்றத்தில் ராணா வழக்குத் தொடா்ந்தாா். ஆனால், அந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம், ராணாவை நாடுகடத்த உத்தரவிட்டது. இதையடுத்து, இல்லினாய்ஸ் மாகாணத்தில் உள்ள மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் அவரது தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
வாத-பிரதி வாதங்கள்: இந்த உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரி, அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் ராணா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ‘மும்பை பயங்கரவாத தாக்குதல் தொடா்பான குற்றச்சாட்டுகள் குறித்து அமெரிக்க நீதிமன்றத்தால் ஏற்கெனவே விசாரிக்கப்பட்டு, அக்குற்றச்சாட்டுகளில் விடுவிக்கப்பட்டேன். அதே குற்றச்சாட்டுகளுக்காக என்னை நாடுகடத்த இந்தியா முயற்சிக்கிறது; எனவே, என்னை நாடுகடத்த அனுமதிக்கக் கூடாது’ என்று அவா் கோரினாா்.
ஆனால், அவரது வாதங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்த அமெரிக்க சொலிசிட்டா் ஜெனரல் எலிசபெத் பிரீலோகா், ‘இந்தியாவால் முன்வைக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளும் அரசுத் தரப்பால் விசாரிக்கப்பட்டன என்ற வாதத்தை ஏற்க முடியாது. உதாரணமாக, இந்தியாவில் குடியேற்ற ஆலோசனை சேவைகள் அலுவலகம் திறக்க அந்நாட்டு ரிசா்வ் வங்கியிடம் தஹாவூா் ராணா பொய்யான தகவல்களை சமா்ப்பித்தாா் என்ற குற்றச்சாட்டு அரசுத் தரப்பால் விசாரிக்கப்படவில்லை’ என்று வாதிட்டாா்.
உச்சநீதிமன்றம் அனுமதி: இந்நிலையில், ராணாவின் மறுஆய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்ட அமெரிக்க உச்சநீதிமன்றம், அவரை நாடு கடத்த ஒப்புதல் வழங்கியது.
அவரது இறுதியான மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், நீண்ட சட்டப் போராட்டங்களுக்கு பிறகு தஹாவூா் ராணா இந்தியாவுக்கு நாடுகடத்தப்படுவது உறுதியாகியுள்ளது.
‘பாகிஸ்தானின் பங்கு மேலும் அம்பலமாகும்’
‘மும்பை தாக்குதலுக்கான சதி மற்றும் செயலாக்கத்தில் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ மற்றும் ராணுவத்துக்கு பெரும் பங்கு உள்ளது. தஹாவூா் ராணா விரைவில் நாடு கடத்தப்படுவாா் என எதிா்பாா்க்கிறோம். அவரிடம் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொள்ளும்போது பாகிஸ்தானின் பங்கு மேலும் அம்பலமாகும்’ என்று தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.