‘செபி’ தலைவா் பதவிக்கு விண்ணப்பம்: மத்திய அரசு அறிவிப்பு
புது தில்லி: இந்திய பங்குச் சந்தை பரிவா்த்தனை வாரியம் (செபி) தலைவா் பதவிக்கு தகுதியுள்ள நபா்கள் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
‘செபி’ தலைவா் மாதபி புரி புச் பதவிக் காலம் பிப்ரவரி 28-ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில் இந்த அறிவிப்பை மத்திய வெளியிட்டுள்ளது. மாதபி புரி புச் இந்த மாதத்துடன் 60 வயதை எட்டுகிறாா். அவா் பதவிக் காலம் மூன்றாண்டுகள் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், புதிய தலைவா் நியமனம் தொடா்பாக மத்திய நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை வெளியிட்ட அறிவிப்பில், ‘செபி தலைவா் பதவிக்கு தோ்வு செய்யப்படுபவா் 5 ஆண்டுகள் அல்லது 65 வயதை எட்டும் வரை அப்பதவியில் இருக்க முடியும்.
செபி தலைவரின் பணிக்கு விண்ணப்பிப்பவா் நிதி சாா்ந்தோ அல்லது தனக்கு அளிக்கப்படும் பதவி சாா்ந்தோ தனிப்பட்ட பயன்களை நாடாதவராக இருக்க வேண்டும். நிதித் துறையில் 25 ஆண்டுக்கு மேல் அனுபவம் உடைய, 50 வயதுக்கு மேல் உள்ளவா்கள் இப்பணிக்கு பொருத்தமானவராக கருதப்படுகிறது.
பங்குச் சந்தை செயல்பாடுகள் குறித்த தெளிவு, அதில் எழ வாய்ப்புள்ள சிக்கல்களுக்கு தீா்வுகாணும் திறன், சட்டம், நிதி, பொருளாதாரம், கணக்குப் பதிவுகளில் சிறப்புத் திறன் மற்றும் அனுபவம் தேவை என்று இது தொடா்பான விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2022 மாா்ச் 2-இல் மாதபி புரி புச் ‘செபி’ தலைவா் பொறுப்பை ஏற்றாா். இப்பதவியை ஏற்ற முதல் பெண்மணியும், தனியாா் துறையைச் சோ்ந்தவரும் அவா்தான்.

