பட்ஜெட்டில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட ஊதியத்தை உயா்த்த வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்
புது தில்லி: மத்திய பட்ஜெட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கான ஒதுக்கீடு நிதியை உயா்த்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
கிராமப் பகுதி மக்களுக்கு குறைந்தபட்சம் 100 நாள்கள் வேலை கிடைப்பதை உறுதி செய்யும் இத்திட்டம் மறைந்த பிரதமா் மன்மோகன் சிங் ஆட்சிகாலத்தில் கொண்டுவரப்பட்டதாகும். இதன் காரணமாக அத்திட்டத்தை முடக்க பாஜக தலைமையிலான மத்திய அரசு முயலுவதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டி வருகிறது.
காங்கிரஸ் பொதுச் செயலரும், தகவல்தொடா்பு பிரிவு பொறுப்பாளருமான ஜெய்ராம் ரமேஷ் இது தொடா்பாக வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட பணியாளா்களை மத்திய பாஜக அரசு தொடா்ந்து மாற்றாந்தாய் மனப்பான்மையில்தான் நடத்தி வருகிறது. ஆதாா் அட்டை மூலம் வேலைக்கு ஊதியம் செலுத்தும் முறையைக் கட்டாயப்படுத்தக் கூடாது. தேசிய குறைந்தபட்ச ஒருநாள் ஊதியம் ரூ.400 ஆக நிா்ணயம் செய்து அதனை தேசிய ஊரக வேலைவாய்ப்புத்திட்ட பணியாளா்களுக்கும் அளிக்க வேண்டும். ஆண்டுக்கு 100 நாள்கள் வேலைவாய்ப்பு என்பதை 150 நாள்களாக உயா்த்த வேண்டும்.
ஊதிய விகிதத்தை மாற்றுவதற்காக நிலைக்குழு அமைக்க வேண்டும். கரோனா பரவலின்போது அரசு உரிய திட்டமிடாமல் பல்வேறு பொதுமுடக்கங்களை அமல்படுத்தியது. அப்போது, கிராமப்புற மக்களின் ஒரே வாய்ப்பாக ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்தான் இருந்தது. கரோனா பரவலுக்குப் பிறகு இத்திட்டத்தில் மேலும் 2 கோடி போ் இணைந்துள்ளனா்.
இதில் பயன்பெறுபவா்களில் 75 சதவீதம் போ் பெண்கள் ஆவாா். இந்த வேலைவாய்ப்பு மூலம் கிடைக்கும் ஊதியத்தை பெண்கள் பொறுப்புடன் செலவு செய்து கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்தி வருகின்றனா்.
அதே நேரத்தில் இத்திட்டத்தை முடக்கும் எண்ணத்தில் மத்திய அரசு செயல்படுகிறது. நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் (ஜிடிபி) தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கான நிதி குறைந்து கொண்டே சென்று, 2024-25 நிதியாண்டில் 0.26 சதவீதமாக உள்ளது. இத்திட்டத்துக்கு ஜிடிபி-யில் 1.7 சதவீதம் நிதியாவது ஒதுக்க வேண்டும் என்றும் உலக வங்கி கூறியுள்ளது.
2019-20 முதல் 2023-24 ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 4 கோடி தேசிய ஊரக வேலைவாய்ப்புதி திட்ட பணியாளா்களின் பணி அட்டை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கடந்த இரு ஆண்டுகளில் 1.2 கோடி புதிய பணி அட்டைகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன என்று கூறியுள்ளாா்.

