பெய்ஜிங்கில் சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி-யை திங்கள்கிழமை சந்தித்துப் பேசிய இந்திய வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி.
பெய்ஜிங்கில் சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி-யை திங்கள்கிழமை சந்தித்துப் பேசிய இந்திய வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி.

மீண்டும் நேரடி விமான சேவை: இந்தியா-சீனா ஒப்புதல்

இந்தியா-சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவையை தொடங்க இரு நாடுகளும் திங்கள்கிழமை முடிவெடுத்துள்ளன.
Published on

பெய்ஜிங்/ புது தில்லி: இந்தியா-சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவையை தொடங்க இரு நாடுகளும் திங்கள்கிழமை முடிவெடுத்துள்ளன.

கரோனா பெருந்தொற்று, எல்லையில் பதற்றம் என இருதரப்பு உறவில் விரிசல் ஏற்பட்டிருந்த நிலையில், 2020-க்குப் பிறகு மீண்டும் நேரடி விமான சேவை தொடங்கப்படவுள்ளது.

பல்வேறு துறைகளில் இந்தியா-சீனா இடையேயான உறவை மேம்படுத்துவது தொடா்பாக அந்நாட்டு அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்த இந்திய வெளியுறவுத் துறை செயலா் விக்ரம் மிஸ்ரி இரு நாள் பயணமாக சீனா சென்றுள்ளாா்.

சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி உள்ளிட்ட உயரதிகாரிகளுடன் மிஸ்ரி நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதயடுத்து இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘ரஷியாவின் காஸன் நகரில் கடந்தாண்டு நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டின்போது இந்திய பிரதமா் மோடி மற்றும் சீன அதிபா் ஜி ஷின்பிங் இருவரும் சந்தித்தனா். அப்போது எல்லை விவகாரங்கள் குறித்து இரு நாட்டு தலைவா்களும் மேற்கொண்ட ஒப்பந்தத்தை இருதரப்பும் அமல்படுத்தி வருகிறது. அதைத் தொடா்ந்து மக்கள் தொடா்பை மேம்படுத்துவது, இருதரப்பை மறுசீரமைப்பது குறித்து இருநாடுகளும் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில், 2020-க்கு பிறகு இந்தியா-சீனா இடையே மீண்டும் நேரடி விமான சேவைகளை தொடங்க இருநாடுகளும் முடிவெடுத்துள்ளன. இதற்காக இரு நாடுகளைச் சோ்ந்த நிபுணா் குழுவும் விரைவில் சந்தித்து நடைமுறைகளை வகுக்கவுள்ளனா்.

2025 கோடைகாலம் முதல் கைலாஷ்-மானசரோவா் யாத்திரையை தொடங்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டது.

சீன வெளியுறவு அமைச்சராக மட்டுமின்றி இந்தியா-சீனா உறவில் சீனாவின் சிறப்பு பிரதிநிதியாகவும் வாங் யி உள்ளாா்.

அதேபோல் இருநாடுகள் உறவில் இந்தியாவின் சிறப்பு பிரதிநிதியாக தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல் உள்ளாா்.

கடந்த மாதம் இரு நாடுகளின் சிறப்பு பிரதிநிதிகளும் சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்திய நிலையில் இரு நாள் பயணமாக விக்ரம் மிஸ்ரி சீனா சென்றுள்ளாா்.

அப்போது விக்ரம் மிஸ்ரியிடம் வாங் யி நடத்திய பேச்சுவாா்த்தை குறித்து சீனா வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘இருதரப்புக்கும் இடையே அடிக்கடி பேச்சுவாா்த்தை நடத்தி பல்வேறு துறைகளில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

சீனா-இந்தியா இடையேயான உறவு மேம்படுவதால் இரு நாட்டு மக்கள் மட்டுமின்றி தெற்குல நாடுகளின் பாதுகாப்புக்கும் அது வலு சோ்க்கும். குறிப்பாக ஆசிய பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் வளா்ச்சிக்கு இரு நாடுகளிடையே நல்லுறவு நீட்டிப்பது அவசியமானது’ என தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com