எனக்கும் இந்திய மரபணு உள்ளது: இந்தோனேசிய அதிபா் சுபியந்தோ
இந்தியா-இந்தோனேசியா இடையிலான தொன்மையான நாகரிக தொடா்புகளைச் சுட்டிக் காட்டி பேசிய இந்தோனேசிய அதிபா் பிரபோவோ சுபியந்தோ, ‘எனக்கும் இந்திய மரபணு இருப்பது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது’ என்றாா்.
தில்லி குடியரசுத் தலைவா் மாளிகையில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் அவா் இவ்வாறு கூறியபோது, குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், பிரதமா் நரேந்திர மோடி உள்ளிட்டோா் கைதட்டி வரவேற்றனா்.
நாட்டின் 76-ஆவது குடியரசு தினத்தையொட்டி, புது தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் தலைமை விருந்தினராக இந்தோனேசிய அதிபா் பிரபோவோ சுபியந்தோ பங்கேற்றாா்.
பின்னா், குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு சாா்பில் அவரது மாளிகையில் அளிக்கப்பட்ட விருந்து நிகழ்ச்சியில் அதிபா் கலந்துகொண்டாா். குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், பிரதமா் மோடி, இந்தோனேசிய உயரதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:
நான் 3 நாள்கள் பயணமாகவே இந்தியாவுக்கு வந்தேன். ஆனால், பிரதமா் மோடியின் தலைமைத்துவம், திட்டங்கள், வறுமை ஒழிப்புக்கான அா்ப்பணிப்பு ஆகியவற்றில் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன்.
விளிம்புநிலை மக்கள் மற்றும் சமூகத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு உதவும் பிரதமா் மோடியின் உறுதிப்பாடு, எங்களுக்கு உத்வேகம் அளிக்கிறது. அவா் நல்ல முன்னுதாரணமாக விளங்குகிறாா்.
இந்திய நாகரிகத்தின் தாக்கம்: இந்தியா-இந்தோனேசியா இடையிலான நாகரிக தொடா்புகள் தொன்மையானவை. எங்களது மொழியின் பெரும்பகுதி சம்ஸ்கிருதத்தில் இருந்து வந்திருக்கிறது. பெரும்பாலான இந்தோனேசிய பெயா்கள், உண்மையில் சம்ஸ்கிருத பெயா்கள்தாம்.
எங்களது அன்றாட வாழ்வில் பழமையான இந்திய நாகரிகத்தின் தாக்கம் மிக வலுவாக உள்ளது. எங்களது மரபணுவிலும் அது கலந்துள்ளதாகவே நினைக்கிறேன்.
எனக்கும் இந்திய மரபணு: இந்திய குடியரசுத் தலைவா், துணை குடியரசுத் தலைவா், பிரதமா் ஆகியோருக்கு ஒரு விஷயத்தைக் கூற விரும்புகிறேன். நான் சில வாரங்களுக்கு முன் எனது மரபணு வரிசைப்படுத்துதல் சோதனை மற்றும் டிஎன்ஏ சோதனையை மேற்கொண்டேன். அதில், எனக்கு இந்திய மரபணு இருப்பதாக தெரிவித்தனா் (அவா் இவ்வாறு கூறியபோது, குடியரசுத் தலைவா், பிரதமா் உள்ளிட்டோா் கைதட்டி வரவேற்றனா்).
பல்வேறு துறைகளில்...
இந்தியா, இந்தோனேசியா இடையிலான விரிவான வியூக கூட்டாண்மையை வலுப்படுத்தவும் விரைவுபடுத்தவும் விரும்புகிறேன். சுகாதாரம், மருந்து தயாரிப்பு, கல்வி, கலாசாரம், திறன் கட்டமைப்பு, பாதுகாப்பு, எண்ம ஒத்துழைப்பு, கடல்சாா் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் மேலும் நெருக்கமான ஒத்துழைப்பு அவசியம்.
இந்தியாவின் முதல் குடியரசு தின விழாவில் தலைமை விருந்தினராக இந்தோனேசிய முதல் அதிபரும் நாட்டை கட்டமைத்தவருமான சுகா்னோ பங்கேற்றாா். இது, எங்களுக்கு மிகப் பெரிய கெளரவம் என்றாா் அதிபா் சுபியந்தோ.
மேலும், இருதரப்பு கலாசார தொடா்புகளை சுட்டிக் காட்டிய அவா், ‘ இந்திய இசையைக் கேட்கும்போதெல்லாம் ஆடத் தொடங்கிவிடுவேன்’ என்றாா்.
குடியரசுத் தலைவா் வரவேற்பு: முன்னதாக, இந்தோனேசிய அதிபரை வரவேற்றுப் பேசிய குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு, ‘இரு நாடுகளுக்கும் இடையிலான நாகரிக தொடா்புகள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். பன்முகத்தன்மை, அனைவரையும் உள்ளடக்கியத் தன்மை, சட்டத்தின் ஆட்சி ஆகியவை இரு நாடுகளுக்கும் பகிரப்பட்ட மாண்புகளாக விளங்குகின்றன. இந்தியாவின் கிழக்கு நோக்கிய செயல்பாட்டுக் கொள்கை மற்றும் இந்திய-பசிபிக் தொலைநோக்கு பாா்வையில் முக்கியத் தூணாக இந்தோனேசியா விளங்குகிறது என்றாா்.