குடியரசு தின வாழ்த்து: உலக நாடுகளுக்கு பிரதமா் மோடி நன்றி
புது தில்லி: 76-ஆவது குடியரசு தினத்துக்கு வாழ்த்து தெரிவித்த வெளிநாட்டுத் தலைவா்களுக்கு பிரதமா் மோடி திங்கள்கிழமை நன்றி தெரிவித்தாா்.
இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் 76-ஆவது குடியரசு தினம் கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையடுத்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜப்பான், சீனா, நேபாளம், பூடான், சிங்கப்பூா் உள்ளிட்ட நாடுகள் இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்தன.
அந்நாட்டு தலைவா்களுக்கு நன்றி தெரிவித்து பிரதமா் மோடி வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘குடியரசு தின வாழ்த்து தெரிவித்த பிரான்ஸ் அதிபரும் எனது நண்பருமான இமானுவல் மேக்ரானுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். கடந்தாண்டு நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நீங்கள் பங்கேற்றது சிறப்பு வாய்ந்த தருணம். பாரீஸில் நடைபெறவுள்ள செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மாநாட்டில் விரைவில் சந்திப்போம்.
ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை இந்தியா மற்றும் அயா்லாந்து நட்புறவை மேம்படுத்தும். குடியரசு தின வாழ்த்து தெரிவித்த அயா்லாந்து பிரமதா் மைக்கேல் மாா்டினுக்கு நன்றி. அதேபோல் வாழ்த்துகள் தெரிவித்த நேபாள பிரதமா் கே.பி.சா்மா ஓலி, மாலத்தீவு அதிபா் முகமது மூயிஸ், பூடான் பிரதமா் ஷெரிங் டோப்கே உள்ளிட்டவா்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நிகழாண்டு நடைபெற்ற குடியரசு தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இந்தோனேசிய பிரதமா் பிரபோவோ சுபியாந்தோவுக்கும் நன்றி’ என குறிப்பிட்டாா்.

