ஸோஹோ தலைமை செயல் அலுவலர் ஸ்ரீதர் வேம்பு ராஜிநாமா!

ஸோஹோ தலைமை செயல் அலுவலர் பதவியை ஸ்ரீதர் வேம்பு ராஜிநாமா செய்தார்.
ஸ்ரீதர் வேம்பு (கோப்பிலிருந்து)
ஸ்ரீதர் வேம்பு (கோப்பிலிருந்து)
Published on
Updated on
1 min read

ஸோஹோ கார்ப்பரேஷன் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, ஸோஹோ மென்பொருள் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

அவர் ஸோஹோ மென்பொருள் நிறுவனத்தின் 'தலைமை விஞ்ஞானி' என்ற பதவியை ஏற்று, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் கவனம் செலுத்தவிருப்பதாக தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஸோஹோ தலைமை செயல் அலுவலர் பதவியை ராஜிநாமா செய்வது குறித்து ஸ்ரீதர் வேம்பு எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது,

புதிய அத்தியாயம் இன்று தொடங்குகிறது.

தற்போது வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால், நாம் சந்தித்து வரும் சவால்கள் மற்றும் வாய்ப்புகளால், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் நான் எனது முழுக் கவனத்தையும் செலுத்துவது சரியாக இருக்கும் என்று முடிவு செய்துள்ளேன், ஊரக வளர்ச்சித் திட்டத்துடன், இதனையும் தொடர்ந்து செய்வதே சிறந்தது என கருதுகிறேன்.

இதைக் கருத்தில் கொண்டு ஸோஹோ கார்ப் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் பதவியிலிருந்து விலகுகிறேன், மூத்த விஞ்ஞானி என்ற புதிய பதவியை ஏற்றுக்கொள்கிறேன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் இனி முழுக் கவனத்தையும் செலுத்துவேன்.

எங்களது இணை நிறுவனர் சைலேஷ் குமார் தாவே, நமது குழுமத்தின் புதிய தலைமை செயல் அலுவலராக இனி செயல்படுவார். மேலும், நம்முடைய இணை நிறுவனர் டோனி தாமஸ் அமெரிக்க ஸோஹோ நிறுவனத்தின் தலைமையை ஏற்பார். ராஜேஷ் கணேசன், நிறுவனத்தின் மேலாண்மையைக் கவனிப்பார், மணி வேம்பு ஸோஹோ.காம் பிரிவின் தலைமையை ஏற்பார் என்றும் தெரிவித்துள்ளார்.

எங்கள் நிறுவனத்தின் எதிர்காலம் முற்றிலும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் எதிர்கொள்ளும் சவாலை எவ்வளவு சிறப்பாக வழிநடத்துகிறோம் என்பதைப் பொறுத்து அமையும். மேலும், ஆற்றலுடனும் வீரியத்துடனும் எனது புதிய வேலையை எதிர்கொள்வேன். தொழில்நுட்பம் சார்ந்த வேலைகளில் மீண்டும் கைகோர்ப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீதர் வேம்புவால் நிறுவப்பட்டது ஸோஹோ நிறுவனம். கிளவுட்-தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட மென்பொருள் நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை இவரும், இவரது இரண்டு உடன்பிறந்தவர்களும் வைத்திருக்கிறார்கள்.

ஸோஹோ நிறுவனம், செமிகண்டக்டர் துறையில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. இந்நிறுவன தலைமை செயல் அலுவலராக இருந்த ஸ்ரீதர் வேம்பு, தற்போது தலைமை விஞ்ஞானியாகப் பணியாற்றி வருகிறார். ஸோஹோ நிறுவனத்தின் அலுவலகங்கள் ஏழு நாடுகளில் இயங்கி வருகின்றன. தமிழகத்தின் திருநெல்வேலியிலும் இதன் அலுவலகம் உள்ளது.

பிரின்ஸ்டன் பல்கலையில் எலக்ட்ரிக்கல் பொறியியல் பிரிவில் பிஎச்டி பட்டம் பெற்றவர் ஸ்ரீதர் வேம்பு. பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள், பள்ளியிலிருந்து நேரடியாக சேரும் வகையில் ஸோஹோ பல்கலைக்கழகத்தையும் நடத்தி வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com