
தேசிய கல்விக் கொள்கை, சமூக நீதியை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது என்று பல்கலைக்கழக மானியக் குழு தலைவர் ஜகதீஷ் குமார் தெரிவித்தார்.
சென்னையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் நடத்தும் கல்விச் சிந்தனை அரங்கு 2025 திங்கள்கிழமை காலை தொடங்கியது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பல்கலைக்கழக மானியக் குழுத் தலைவர் ஜகதீஷ் குமார், இந்திய தேர்வுகளில் சீர்திருத்தம் குறித்து உரையாற்றினார்.
அவர் பேசியதாவது:
“உயர்கல்வியில் பரவலான சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதற்காக 2020 ஆம் ஆண்டில், தேசிய கல்விக் கொள்கையை நாங்கள் அறிமுகப்படுத்தினோம்.
தேசிய கல்விக் கொள்கையானது சமத்துவம் மற்றும் சமூக நீதியை அடிப்படையாகக் கொண்டது.
தேசிய அளவிலான தேர்வை நடத்துவது கனவாக இருந்தது. ஆனால், தற்போது நம்மிடம் பிரத்யேகமாக தேசிய தேர்வு முகமை உள்ளது, அதனை திறம்படச் செயல்படுத்துவது முக்கியம்.
2018 முதல் பெரும்பாலான நுழைவுத் தேர்வுகளை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. தொடக்கத்தில் 60 லட்சம் மாணவர்களைக் கையாண்டது, ஆனால் தற்போது கிட்டத்தட்ட 2 கோடி மாணவர்களுக்குத் தேர்வுகளை நடத்தி வருகிறது.
பல நுழைவுத் தேர்வுகள் நடத்துவதால் மாணவர்களுக்கு மிகுந்த அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. அதனால்தான் தேசிய அளவில் ஒரே நுழைவுத் தேர்வை நோக்கி நகர்கிறோம். தற்போது அதனை கையாளுவதற்கான தொழில்நுட்பம் நம்மிடம் உள்ளது.
பள்ளிகளில் மாணவர்களுக்கு கற்பிக்கும் விஷயங்கள் நுழைவுத் தேர்வுகளுடன் பொருந்தாததால் சிரம நிலை ஏற்படுகிறது. இதனால் அவர்கள் பயிற்சிக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இந்த நிலை மாற வேண்டும்.
மாணவர்களுக்கு தேர்வில் மறுமுறை முயற்சிக்கவும், தங்கள் செயல்திறனை மேம்படுத்தவும் போதுமான வாய்ப்புகள் இல்லாததால் தோல்வி பயம் ஏற்படுகிறது. பதற்றத்தை தவிர்ப்பதற்கான வழிகளை நாம் கற்பிக்க வேண்டும். பள்ளிகள், மாணவர்களுக்கு படத் திட்டங்களை எவ்வாறு நிர்வகிப்பது என்பதைக் கற்பிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.