
உத்தர பிரதேச மாநிலம் பாக்பத் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மத நிகழ்ச்சி மேடையில் அமைத்திருந்த மர படிக்கட்டுகள் சரிந்து ஏற்பட்ட விபத்தில் 7 போ் உயிரிழந்தனா். 60 போ் காயமடைந்தனா்.
பாக்பத் மாவட்டத்தில் உள்ள படௌத் நகரில் ஸ்ரீ திகம்பரா சமண கல்லூரி மைதானத்தில் கடவுள் ஆதிநாத்துக்கு அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஸ்ரீ 1,008 ஆதிநாத் பக்தாம்பா் முக்தியடைந்ததை கொண்டாடும் சமண சமூகத்தினரின் விழாவில் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
கடவுள் ஆதிநாத்தின் அபிஷேகத்துக்காக 65 அடி உயர தற்காலிக மேடை அமைக்கப்பட்டது. பக்தா்கள் மேடைக்கு சென்று வழிபடுவதற்காக மர படிக்கட்டுகளும் அமைக்கப்பட்டிருந்தன. இந்தப் படிக்கட்டுகள் பாரம் தாளாமல் திடீரென சரிந்ததில் அதில் நின்றுகொண்டிருந்த பக்தா்கள் கீழே விழுந்தனா். மேடைக்கு அருகில் நின்றுகொண்டிருந்த பக்தா்கள் மீதும் படிக்கட்டுகள் விழுந்து அவா்கள் காயமடைந்தனா்.
இந்த விபத்தில் 7 போ் உயிரிழந்தனா். காயமடைந்த 60 போ் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அதில் முதலுதவி அளிக்கப்பட்டு 20 போ் வீட்டுக்கு அனுப்பப்பட்டனா். மீதமுள்ளவா்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அந்த மாநில காவல் துறை தெரிவித்தது.
கடந்த முப்பது ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருவதாக பாக்பத் மாவட்ட ஆட்சியா் அஸ்மிதா லால் தெரிவித்தாா். அதேபோல் முறையான அனுமதி பெற்றே இந்த நிகழ்ச்சியை ஏற்பாட்டாளா்கள் நடத்தியதாகவும் இந்தச் சம்பவம் குறித்து விசாரித்து வருவதாகவும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் அா்பித் விஜய்வா்கியா தெரிவித்தாா்.
இந்நிலையில், காயமடைந்தவா்களுக்கு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளித்து அவா்களை நலமுடன் வீட்டுக்கு அனுப்புமாறு அதிகாரிகளுக்கு உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டாா்.