
புது தில்லி : தில்லி உள்பட வட இந்தியாவின் பெரும்பாலான இடங்களில் கடுங்குளிர் வாட்டி வதைக்கிறது. இதனால் மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
தலைநகர் புது தில்லியைப் பொறுத்தவரை, கடந்த 4 நாள்களில் இல்லாத அளவுக்கு செவ்வாய்க்கிழமை (ஜன. 28) குளிர் சீதோஷ்ணம் நிலவுகிறது. அங்கு குறைந்தபட்ச வெப்பநிலையாக 6.6 டிகிரி செல்சியஸ் பதிவாகியது. பிப். 1-ஆம் தேதி மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தில்லியில் காற்றுத் தரக் குறியீடு 258 ஆக பதிவாகி ‘மோசம்’ பிரிவில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹிமாசல பிரதேசம், பஞ்சாப், ஹரியாணாவில் இன்று குளிர் அலை வீச வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் வட எல்லையான ஜம்மு காஷ்மீரிலும் உறைபனி வெப்பநிலை வாட்டுகிறது; குளிர் அலையும் வீசுகிறது. ஸ்ரீநகரில் -4.3 டிகிரி செல்சியஸ் பதிவாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.