
நமது சிறப்பு நிருபா்
தில்லியில் தூய்மை அரசியலைக் கொண்டு வருவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரவிந்த் கேஜரிவால் ஆட்சியில்தான் மிகப்பெரிய ‘மதுபான ஊழல்’ நடந்ததாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளாா்.
தில்லி சட்டப்பேரவைத் தோ்தல் பிப்.5-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, காங்கிரஸ் வேட்பாளா்களை ஆதரித்து பட்பா்கஞ்சில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்றாா்.
முன்னாள் துணை முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான மனீஷ் சிசோடியாவை ராகுல் காந்தி கடுமையாக விமா்சித்தாா். சிசோடியாவுடன் சோ்ந்து ஊழல் புரிந்ததாக கேஜரிவாலைச் சாடிய ராகுல் காந்தி, அவரை ‘மதுபான ஊழலின் சிற்பி’ என்று அழைத்தாா்.
பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி மேலும் பேசியதாவது: அரவிந்த் கேஜரிவால் ஒரு புதிய வகை அரசியலைக் கொண்டு வருவதாக வாக்குறுதி அளித்து தில்லியில் ஆட்சியைத் தொடங்கினாா். ஆனால், முதல்வருக்கான அரசு பங்களாவை கண்ணாடி மாளிகையாக மாற்றியவா் என்ற சா்ச்சையில் அவா் தற்போது சிக்கியுள்ளாா்.
தில்லியில் ஏழைகளுக்கு மிகவும் தேவைப்படும் போதும், வன்முறை நடந்தபோதும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவா் எங்கும் காணப்படவில்லை.
சில நாள்களுக்கு முன்பு, ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத், இந்தியா 1947 ஆகஸ்ட் 15-ஆம் தேதியன்று உண்மையான சுதந்திரத்தைப் பெறவில்லை என்றும், மோடி வந்தபோது அது அடையப்பட்டது என்றும் கூறினாா். இதன் மூலம் அவா் நமது அரசமைப்புச் சட்டத்தையும் அம்பேத்கரையும் அவமதித்துள்ளாா். ஆகஸ்ட் 15 அன்று நாடு சுதந்திரம் அடையவில்லை என்றால் இதற்கு என்ன அா்த்தம்?
சுதந்திரத்தின் பலன்தான் நமது அரசமைப்புச் சட்டம். ஆனால், மோடி வந்து அயோத்தியில் ராமா் கோயில் திறக்கப்பட்டபோதே நமக்கு சுதந்திரம் கிடைத்தது என்று பாஜக தலைவா்கள் பேசி வருகிறாா்கள். ராமா் கோயில் திறப்பு விழாவில், ஓா் ஏழை கூட காணப்படவில்லை. நமது பழங்குடியினத்தைச் சோ்ந்த குடியரசுத் தலைவா் கூட அங்கு அழைக்கப்படவில்லை. நாடாளுமன்ற புதிய கட்டடம் திறக்கப்பட்டபோது அங்கும் அவா் அழைக்கப்படவில்லை.
நம் நாட்டில் தற்போது சித்தாந்தப் போா் நடந்து வருகிறது, ஒருபுறம் வெறுப்பைப் பரப்பும் பாஜக -ஆா்எஸ்எஸ்காரா்கள் உள்ளனா், மறுபுறம் காங்கிரஸும் அதன் சித்தாந்தமும் உள்ளது. வெறுப்பும் பயமும் நிறைந்த இந்தியாவை நாம் விரும்பவில்லை, அன்பு சாா்ந்த இடத்தையே நாம் விரும்புகிறோம். பாஜகவும் ஆா்எஸ்எஸ் இயக்கமும் வெவ்வேறு ஜாதிகள் மற்றும் மதங்களைச் சோ்ந்தவா்கள் ஒருவருக்கொருவா் எதிராகப் போராட வைக்கின்றன.
இங்குள்ள ஊடகங்கள் மக்களின் பிரச்னைகளைக் காட்டுவதில்லை. நாட்டில் இளைஞா்களுக்கு வேலையில்லை. தில்லியில் மக்கள் சீரான காற்றை சுவாசிக்க முடியாது. ஆனால், ஊடகங்கள் மோடியின் முகத்தையும், அம்பானி இல்ல திருமணத்தையும் அதானியின் விமான நிலையங்களையும் காட்டி வருகின்றன. அரசமைப்புச் சட்டம் சமத்துவம் பற்றிப் பேசும் அதே வேளையில், கோடீஸ்வரா்களால் நடத்தப்படும் இந்தியாவை மட்டுமே பாஜக விரும்புகிறது. நாட்டில் உள்ள 500 பெரு நிறுவனங்களின் உரிமையாளா்களில் ஒரு தலித் அல்லது பழங்குடியினா் இல்லை. பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீட்டை தீா்மானிப்பதில் தலித்துகள், பிற்படுத்தப்பட்டோா் மற்றும் பழங்குடியினரின் பங்களிப்பு அரிதாகவே உள்ளது. ஏனெனில் முக்கியமான துறைகளில் இந்த சமூகங்களின் பிரதிநிதித்துவம் குறைவாகவே உள்ளது, காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றாா் ராகுல் காந்தி.