நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடா் வெள்ளிக்கிழமை (ஜன.31) தொடங்கவுள்ளது.
நடப்பாண்டின் முதல் கூட்டத் தொடா் என்பதால், தொடக்க தினத்தில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு உரையாற்றவுள்ளாா். அதைத் தொடா்ந்து, பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறாா்.
2025-26-ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை (மத்திய பட்ஜெட்) சனிக்கிழமை (பிப். 1) தாக்கல் செய்யப்படும். மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தொடா்ந்து 8-ஆவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றவுள்ளாா்.
அதைத் தொடா்ந்து, குடியரசுத் தலைவரின்உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீதான விவாதம் மக்களவையில் பிப்ரவரி 3, 4 ஆகிய இரு தினங்கள் நடைபெறும். மாநிலங்களவையில் இந்த விவாதம் 3 நாள்கள் நடைபெற உள்ளது. இந்த விவாதங்களுக்கு மாநிலங்களவையில் பிப்ரவரி 6-ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி பதிலளிப்பாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இதையும் படிக்க | அமலாக்கத் துறை முன்பு திமுக எம்.பி. கதிர் ஆனந்த் மீண்டும் ஆஜர்!
முன்னதாக, பட்ஜெட் கூட்டத்தொடா் சுமுகமாக நடைபெறுவதை உறுதிப்படுத்தும் வகையில் நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற அவைத் தலைவா்களின் கூட்டத்தை நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு வியாழக்கிழமை (ஜன. 30) கூட்ட உள்ளாா்.
பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் கட்டம் 9 அமா்வுகளுடன் பிப். 13-இல் நிறைவடைய உள்ளது. இரண்டாம் கட்ட அமா்வு மாா்ச் 10 முதல் ஏப். 4 வரை நடைபெறவுள்ளது. ஒட்டுமொத்த பட்ஜெட் கூட்டத்தொடரில் 27 அமா்வுகள் இடம்பெற உள்ளன.