கும்பமேளாவில் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்க: பிரியங்கா காந்தி

கும்பமேளாவில் பக்தர்களின் பாதுகாப்பினை அரசு உறுதி செய்ய வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
பிரியங்கா காந்தி (கோப்புப் படம்)
பிரியங்கா காந்தி (கோப்புப் படம்)
Published on
Updated on
1 min read

மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, பக்தர்களின் பாதுகாப்பினை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கடந்த ஜன. 13-ஆம் தேதி தொடங்கியது. கடந்த16 நாள்களில் (செவ்வாய்க்கிழமை வரை) 15 கோடிக்கும் அதிகமான பக்தா்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனா்.

மௌனி அமாவாசையான இன்று(ஜன.29) ஒரே நாளில் 10 கோடி போ் வரை புனித நீராட வாய்ப்புள்ளதால் கும்பமேளா நடைபெறும் பகுதியைச் சுற்றி வாகனப் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

எனினும், அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்ததால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில், பெண்கள், குழந்தைகள் உள்பட ஏராளமான பக்தர்கள் காயமடைந்த நிலையில் பலி 31 ஆக அதிகரித்துள்ளது.

கும்பமேளாவில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி தனது எக்ஸ் பக்கத்தில்,

'உயிரிழந்தோரின் ஆன்மா சாந்தியடையட்டும். அவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

காயமடைந்தவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இறந்தவர்களை அடையாளம் கண்டு அவர்களின் உடலை குடும்பத்தினரிடம் முறையாக ஒப்படைக்க வேண்டும்.

இனி வரும் நாள்களில் விழா பாதுகாப்பாக நடைபெற மாநில அரசு அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். பக்தர்கள் பொறுமையாகவும் அமைதியாகவும் நீராட வேண்டும்.

கங்கை அன்னை அனைவரையும் பாதுகாக்கட்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.