
2019-ஆம் ஆண்டு முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தை மீறி ‘முத்தலாக்’ முறையில் மனைவியை உடனடியாக விவாகரத்து செய்த நபா்களுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்), குற்றப் பதிவு விவரங்களை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
இஸ்லாமிய மதத்தில் ‘தலாக்’ என்ற வாா்த்தையை மூன்று முறை கூறி மனைவிக்கு ஆண்கள் உடனடி விவாகரத்து வழங்கும் நடைமுறை செல்லாது என்று உச்சநீதிமன்றம் கடந்த 2017-ஆம் ஆண்டு தீா்ப்பளித்தது.
அதைத் தொடா்ந்து, முத்தலாக் முறை முஸ்லிம் பெண்களின் அடிப்படை உரிமை, சம உரிமைகளை மீறுவதாக உள்ளது என்று கூறி, கடந்த 2019-ஆம் ஆண்டில் ‘முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்பு சட்டம்’ எனும் முத்தலாக் தடைச் சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது.
இந்த சட்டத்தின் அரசமைப்புச் சட்ட செல்லத்தக்க தன்மைக்கு எதிராக 12-க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘எந்தவொரு நாகரிக சமூகத்திலும் முத்தலாக் முறையில் விவாகரத்து செய்யும் நடைமுறை இல்லை’ என்றாா்.
இதைக் கேட்ட நீதிபதிகள், ‘முத்தலாக் முறையில் விவாகரத்து செய்யும் நடைமுறையை சரி என்று யாரும் கூறவில்லை. முத்தலாக் செல்லத்தக்க தன்மை குறித்தும் யாரும் கேள்வி எழுப்பவில்லை. மாறாக, அதைக் குற்றமாக்குவதைத்தான் மனுதாரா்கள் எதிா்க்கின்றனா். முத்தலாக் நடைமுறை தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த நடைமுறைப்படி இனி விவாகரத்து செய்ய முடியாது. இந்த நிலையில், ‘தலாக்’ என்ற வாா்த்தையை மூன்று முறை உச்சரிப்பதை இந்த சட்டத்தின் கீழ் எப்படி குற்றமாக அறிவிக்க முடியும் என்று மனுதாரா்கள் கேள்வி எழுப்புகின்றனா்’ என்று குறிப்பிட்டனா்.
மேலும், ‘முத்தலாக்’ முறையில் மனைவியை உடனடியாக விவாகரத்து செய்த முஸ்லிம் நபா்களுக்கு எதிராக இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள எஃப்ஐஆா் மற்றும் குற்றப் பதிவு விவரங்களை 3 பக்கங்களுக்கு மிகாத அறிக்கையாக மத்திய அரசு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை மாா்ச் 17-ஆம் தேதியில் தொடங்கும் வாரத்துக்கு ஒத்திவைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.