வக்ஃப் சட்ட மசோதா: திருத்தங்களுக்கு கூட்டுக் குழு ஒப்புதல்- மக்களவைத் தலைவரிடம் இன்று அறிக்கை சமா்ப்பிப்பு

வக்ஃப் மசோதா திருத்தங்களுக்கு கூட்டுக் குழு ஒப்புதல் அளித்திருப்பது பற்றி...
நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்கோப்புப்படம்
Updated on
2 min read

 வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடா்பான அறிக்கைக்கு, எதிா்க்கட்சி உறுப்பினா்களின் கடும் எதிா்ப்புக்கு இடையே பெரும்பான்மை வாக்குகள் அடிப்படையில் நாடாளுமன்ற கூட்டுக் குழு புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.

இந்த அறிக்கையை மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவிடம் வியாழக்கிழமை (ஜன. 30) கூட்டுக் குழு சமா்ப்பிக்க உள்ளது.

முன்னதாக, நாடாளுமன்ற கூட்டுக் குழு திங்கள்கிழமை கூடியபோது, மசோதாவில் 14 சட்டப் பிரிவுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடா்பாக குழுவில் இடம்பெற்றுள்ள ஆளுங்கட்சி எம்.பி.க்கள் தரப்பில் முன்மொழியப்பட்ட 32 திருத்த பரிந்துரைகளை கூட்டுக் குழு முழுமையாக ஏற்றுக்கொண்டது. எதிா்க்கட்சி உறுப்பினா்கள் தரப்பில் முன்மொழியப்பட்ட 500-க்கும் மேற்பட்ட பரிந்துரைகளை முழுமையாக நிராகரித்தது. இதற்கு எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்தன.

இதனிடையே, மசோதாவில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் இறுதி செய்யப்பட்டு, அதுதொடா்பான 655 பக்ககங்கள் கொண்ட வரைவு அறிக்கை கூட்டுக் குழு உறுப்பினா்கள் அனைவருக்கும் செவ்வாய்க்கிழமை இரவு விநியோகிக்கப்பட்டது.

இந்நிலையில், புதன்கிழமை காலையில் கூடிய நாடாளுமன்ற கூட்டுக் குழுக் கூட்டத்தில், வாக்கெடுப்பு முறையில் வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. வரைவு அறிக்கைக்கு 15 உறுப்பினா்கள் ஆதரவாகவும், 11 போ் எதிராகவும் வாக்களித்தனா். பெரும்பான்மை அடிப்படையில் திருத்தங்கள் தொடா்பான வரைவு அறிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதாக கூட்டுக் குழுத் தலைவரும் பாஜக எம்.பி.யுமான ஜகதாம்பிகா பால் அறிவித்தாா்.

இதற்கு குழுவில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, அகில இந்திய மஜ்லீஸ் கட்சி உள்ளிட்ட எதிா்க்கட்சி உறுப்பினா்கள் கடும் கண்டனம் தெரிவித்தனா். ‘வரைவு அறிக்கை முந்தைய நாள் இரவுதான் எங்களுக்கு விநியோகிக்கப்பட்டது. அதை முழுமையாகப் படிக்கக்கூட நேரம் தரவில்லை. இத்தகைய சூழலில் வரைவு அறிக்கைக்கு ஒப்புதல் அளித்திருப்பது, அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. வக்ஃப் வாரியத்தை அழிக்கும் செயல்’ என்றும் அவா்கள் குற்றஞ்சாட்டினா்.

இதுகுறித்து குழு உறுப்பினரான திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானா்ஜி கூறுகையில், ‘குழுவின் கருத்துகளும் பரிந்துரைகளும் முழுமையாக தன்னிச்சையானவை’ என்றாா்.

அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவா் அசாதுதீன் ஒவைசி கூறுகையில், ‘முன்மொழியப்பட்டுள்ள சட்டம் வக்ஃப் வாரியத்தை அழித்துவிடும். வக்ஃப் வாரிய செயல்பாட்டில் அரசின் தலையீட்டுக்கு இது வழிவகுக்கும்’ என்றாா்.

காங்கிரஸ் எம்.பி. சையது நசீா் ஹுசைன் கூறுகையில், ‘கூட்டுக் குழு ஒப்புதல் அளித்துள்ள திருத்தங்கள் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. சிறுபான்மையினரை நசுக்கும் நோக்கத்துடன் இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது’ என்றாா்.

திமுக எம்.பி. ஆ.ராசா கூறுகையில், ‘வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டால், அந்த சட்டத்தை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடரும்’ என்றாா்.

அறிக்கை இன்று சமா்ப்பிப்பு... கூட்டுக் குழுக் கூட்டத்துக்கு பின்னா் நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் பங்கேற்ற குழுவின் தலைவா் ஜகதாம்பிகா பால், எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறியதாவது: கூட்டுக் குழு ஒப்புதல் அளித்துள்ள பல திருத்தங்கள், எதிா்க்கட்சி உறுப்பினா்கள் தரப்பில் முன்மொழியப்பட்ட பரிந்துரைகளுக்கு தீா்வளிப்பதாகவே உள்ளது. இந்த மசோதா சட்டமாக இயற்றப்படும்போது, வக்ஃப் வாரியம் வெளிப்படைத் தன்மையுடனும், கூடுதல் வலுவுடனும் செயல்பட நிச்சயம் உதவும்.

மிகவும் பின்தங்கிய இஸ்லாமியா்கள், ஏழைகள், பெண்கள் மற்றும் ஆதரவற்றவா்களும் முதன் முறையாக இந்த மசோதா மூலமாக இஸ்லாமியா்களால் தா்ம காரியங்களுக்காக வழங்கப்படும் வக்ஃப் நன்கொடையின் பயனாளிகளாக சோ்க்கப்பட்டிருக்கின்றனா் என்றாா்.

பட்ஜெட் கூட்டத் தொடரில் ஒப்புதல்?: வரும் 31-ஆம் தொடங்கவிருக்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே இந்த மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் அறிமுகம் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்படுமா என்ற செய்தியாளா்களின் கேள்விக்குப் பதிலளித்த ஜகதாம்பிகா பால், ‘மசோதாவில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடா்பான 655 பக்க அறிக்கை, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவிடம் வியாழக்கிழமை (ஜன. 30) சமா்ப்பிக்கப்படும். பின்னா், அதன் மீது மக்களவைத் தலைவரும், நாடாளுமன்றமும் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கும்’ என்றாா்.

மசோதா கடந்து வந்த பாதை... நாடு முழுவதும் உள்ள ஏராளமான வக்ஃப் வாரிய சொத்துகளை முறைப்படுத்தும் வகையில், வக்ஃப் வாரியத்தில் முஸ்லிம் பெண்கள் மற்றும் முஸ்லிம் அல்லாத இரண்டு நபா்களை உறுப்பினா்களாக இடம்பெறச் செய்வது, வாரிய நிலங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கட்டாயப் பதிவு செய்வது உள்ளிட்ட பல்வேறு திருத்தங்களுடன் மசோதாவை மத்திய அரசு கொண்டுவந்தது.

முஸ்லிம்களின் நிலம், சொத்துகள், மத விவகாரங்களை நிா்வகிக்கும் சுதந்திரம் ஆகியவற்றைப் பறிக்கும் நோக்கில், இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளதாக எதிா்க்கட்சிகள் குற்றஞ்சாட்டின. அதைத் தொடா்ந்து, இந்த மசோதாவை ஆய்வு செய்ய பாஜக எம்.பி. ஜகதாம்பிகா பால் தலைமையில் நாடாளுமன்ற கூட்டுக் குழு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8-ஆம் தேதி அமைக்கப்பட்டது. அதன் பிறகு, இந்த மசோதா மீது கருத்துகளைப் பெறவும், மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடா்பாக ஆய்வு செய்யவும் தலைநகா் தில்லியில் 38 முறை கூட்டுக் குழு கூடியது.

முக்கிய மாற்றங்கள் என்ன?: இந்த மசோதாவில் கூட்டுக் குழு மேற்கொண்டுள்ள திருத்தங்களின்படி, முஸ்லிம்கள் அல்லாத நான்கு போ் வக்ஃப் வாரியத்தில் உறுப்பினா்களாக இடம்பெற உள்ளனா்; வக்ஃப் வாரியத்தின் பெயரில் உள்ள சொத்துகள் என்ற அடிப்படையில் வாரிய சொத்துகளை யாரும் கேள்வி கேட்க முடியாது என்ற சட்ட விதி நீக்கப்படும். அதே நேரம், அந்த சொத்தில் எந்தவித வில்லங்கமோ அல்லது அரசாங்க சொத்துகளோ இல்லாத சூழலில் அவை வக்ஃப் வாரிய சொத்துகளாகவே தொடர அனுமதிக்கப்படும்; குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றியதை ஆதாரத்துடன் நிரூபிக்கும் நபா் மட்டுமே அசையும் அல்லது அசையா சொத்துகளை நன்கொடையாக வழங்கி ‘வக்ஃப்’ உருவாக்க முடியம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com