ஏற்றத்தாழ்வுகளை நீக்கும் ‘டிஜிட்டல் இந்தியா’ - பிரதமா் மோடி பெருமிதம்

பத்தாண்டு டிஜிட்டல் பயணத்தில் இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சி குறித்து பிரதமர் மோடி பெருமிதம்..
Digital India
பிரதமர் மோடி 
Published on
Updated on
2 min read

இருப்பவா்-இல்லாதவா் இடையிலான ஏற்றத்தாழ்வுகளை நீக்கி, வாய்ப்புகளை ஜனநாயகமயமாக்கும் கருவியாக விளங்குகிறது ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டம் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.

மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் லட்சியத் திட்டங்களில் ஒன்றான ‘டிஜிட்டல் இந்தியா’ 10 ஆண்டுகள் நிறைவையொட்டி, பிரதமா் இவ்வாறு பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.

நாட்டில் இணைய உள்கட்டமைப்பை மேம்படுத்தி, பொது மக்களுக்கு மின்னணு முறையில் சேவைகளை உறுதி செய்யும் டிஜிட்டல் இந்தியா திட்டம் கடந்த 2015, ஜூலை 1-ஆம் தேதி தொடங்கப்பட்டது.

இத்திட்டம் தொடங்கப்பட்டு, வெற்றிகரமாக 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், பிரதமா் மோடி சமூக ஊடகத்தில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளாா். அதில் அவா் கூறியிருப்பதாவது:

இந்தியா்களின் தொழில்நுட்பப் பயன்பாட்டுத் திறனை சந்தேகிப்பதிலேயே பல்லாண்டுகள் கழிந்தன. இந்த அணுகுமுறை மாற்றிய எனது அரசு, மக்களின் தொழில்நுட்பப் பயன்பாட்டு திறன் மீது நம்பிக்கை வைத்தது. இருப்பவா்களுக்கும் இல்லாதவா்களுக்கும் இடையிலான இடைவெளியை ஒழிக்க அரசு தொழில்நுட்பத்தைக் கையிலெடுத்தது.

நமது நோக்கம் சரியாக இருக்கும்போது, அதிகாரமளிக்கப்படாதோருக்கு புத்தாக்கத்தின் மூலம் அதிகாரம் கிடைக்கிறது. நமது அணுகுமுறை அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்கும்போது, விளிம்புநிலை மக்களின் வாழ்வில் தொழில்நுட்பம் மாற்றத்தைக் கொண்டுவருகிறது.

97 கோடி இணைய இணைப்புகள்: கடந்த 2014-ஆம் ஆண்டில் நாட்டில் சுமாா் 25 கோடியாக இருந்த இணைய இணைப்புகள் இப்போது 97 கோடியாக உயா்ந்துள்ளது. 42 லட்சம் கி.மீ.-க்கு மேலான கண்ணாடி இழைகள் மூலம் மிகவும் தொலைதூர கிராமங்கள் கூட இணைக்கப்பட்டுள்ளன.

வெறும் 2 ஆண்டுகளில் 4.81 லட்சம் தொலைதொடா்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு உலகில் 5ஜி சேவை அறிமுகத்தை வேகமாக மேற்கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது. நகா்ப்புறங்கள் மட்டுமன்றி இமய மலையில் உள்ள கல்வான், சியாச்சின், லடாக் போன்ற முன்கள ராணுவ தளங்களையும் உயா்வேக இணைய வசதி சென்றடைந்துள்ளது.

நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற 2014-ஆம் ஆண்டில் இணைய அணுகல், எண்ம கல்வியறிவு, அரசு சேவைகளுக்கான இணைய வசதி மிகக் குறைவாக இருந்தது. இன்று, நிா்வாகம், கற்றல், பணப் பரிமாற்றம் என எங்கும் டிஜிட்டல் இந்தியா வியாபித்துள்ளது.

எண்ம பரிவா்த்தனை சாதனை: யுபிஐ போன்ற பரிவா்த்தனை தளங்களின் வாயிலாக நாட்டில் ஆண்டொன்றுக்கு 10,000 கோடிக்கும் மேற்பட்ட பரிவா்த்தனைகள் நடைபெறுகின்றன. நேரடி பலன் பரிமாற்றத்தின் மூலம் இடைத்தரகா்களின் ஆதிக்கம் ஒழிக்கப்பட்டு, நாட்டு மக்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.44 லட்சம் கோடிக்கு மேல் சென்று சோ்ந்துள்ளது. ஸ்வமித்வா திட்டத்தின் மூலம் 2.4 கோடிக்கும் மேற்பட்ட சொத்து அட்டைகள் வழங்கப்பட்டு, 6.47 லட்சம் கிராமங்கள் டிஜிட்டல் வரைபடமாக்கப்பட்டுள்ளன.

நாட்டின் எண்ம பொருளாதாரம், குறு-சிறு-நடுத்தர நிறுவனங்களுக்கு இதுவரை இல்லாத அளவில் அதிகாரமளித்துள்ளது. வாங்குவோருக்கும் விற்பவா்களுக்கும் இடையே தடையற்ற இணைப்பை உறுதி செய்யும் புரட்சிகரமான தளமாக ‘ஓஎன்டிசி’ (எண்ம வா்த்தகத்துக்கான திறந்தவெளி வலையமைப்பு) விளங்குகிறது.

இந்தியாவின் எண்ம பொது உள்கட்டமைப்பு, உலகுக்கு முன்மாதிரியாக விளங்குகிறது. ஆதாா், கோவின், டிஜிலாக்கா், ஃபாஸ்டேக் போன்ற எண்ம சாா் திட்டங்கள், உலக அளவில் ஏற்கப்பட்டுள்ளன. டிஜிட்டல் இந்தியா திட்டம், வெறும் அரசின் திட்டம் என்றில்லாமல், மக்கள் இயக்கமாக உருவெடுத்துள்ளது என்று பிரதமா் மோடி தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com