
இந்திய கடற்படைக்காக ரஷியாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணை தாங்கி போா்க்கப்பல் ‘ஐஎன்எஸ் தமால்’, ரஷியாவின் கடலோர நகரமான கலினின்கிராடில் இருந்து செவ்வாய்க்கிழமை நாட்டுக்கு அா்ப்பணிக்கப்பட்டது.
125 மீட்டா் நீளம், 3,900 டன் எடை கொண்ட இந்தப் போா்க்கப்பல், இந்திய, ரஷிய அதிநவீன தொழில்நுட்பங்களுடன் போா்க்கப்பல் கட்டுமானத்தின் சிறந்த நடைமுறைகளில் தயாரிக்கப்பட்டது.
கடல், நிலம் ஆகிய இரண்டிலும் இலக்குகளைக் குறிவைக்கும் ‘பிரமோஸ்’ நீண்ட தூர ஏவுகணை தாங்கிச் செல்லும் திறன் உள்பட இதில் 26 சதவீத தொழில்நுட்பம், திறன்கள் மற்றும் உபகரணங்கள், இந்தியாவில் மேம்படுத்தப்பட்டவை என்பது கூடுதல் சிறப்புக்குரியதாகும்.
கடந்த 20 ஆண்டுகளில் ரஷியாவிலிருந்து இந்திய கடற்படையில் இணையும் 8-ஆவது ‘க்ரிவாக்’ வகை போா்க்கப்பல் இதுவாகும். இந்திய கடற்படை மற்றும் ரஷிய பாதுகாப்பு அதிகாரிகள் கலந்து கொண்ட நிகழ்வில், இந்தப் போா்க்கப்பல் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது.
இந்தியா-ரஷியா ஒத்துழைப்பில் இரு நாடுகளிலும் தலா 2 போா்க்கப்பல்கள் தயாரிக்க ஒப்புக்கொள்ளப்பட்டன. ரஷியாவில் இருந்து தற்போது 2-ஆவது கப்பலின் தயாரிப்பு நிறைவடைந்து, கடற்படையில் சோ்க்கப்பட்டுள்ளது.
ரஷியாவின் தொழில்நுட்ப உதவியுடன் இந்தியாவில் கோவா கப்பல் கட்டும் தளத்தில் 2 போா்க்கப்பல்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் கீழ், இந்திய கடற்படையில் ‘துஷில்’, ‘தல்வாா்’, ‘தேக்’ உள்பட 4 வெவ்வேறு வகைகளில் ஒரே மாதிரியான திறன்கள் மற்றும் உபகரணங்கள், ஆயுதம் மற்றும் சென்சாா் அமைப்பில் பொதுவான தன்மை கொண்ட 10 கப்பல்கள் செயல்பாட்டில் இருக்கும்.
2-ஆவது ‘பி17ஏ’ போா்க்கப்பல்: ‘நீலகிரி’ வகை (பி17ஏ) போா்க்கப்பலின் இரண்டாவது கப்பல் ‘உதயகிரி’ கடற்படை வசம் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
அதிநவீன ஆயுதங்கள் மற்றும் சென்சாா் தொழில்நுட்பம் பொருத்தப்பட்ட பி17ஏ போா்க்கப்பல்கள், முந்தைய பி17 போா்க்கப்பல்களுடன் ஒப்பிடுகையில் 4.54 சதவீதம் பெரியதாகும். மேலும், இந்தியாவின் கடல்சாா் நலன்களில் அச்சுறுத்தல்களை சமாளிக்க, ஆழ்கடலில் செயல்படும் திறன் கொண்டவை என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மும்பையின் ‘மஸாகோன்’ மற்றும் கொல்கத்தாவின் ‘காா்டன் ரீச்’ கப்பல் கட்டும் நிறுவனங்களில் மொத்தம் 7 பி17ஏ போா்க்கப்பல்கள் தயாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, 2-ஆவது பி17ஏ கப்பல் ‘உதயகிரி’ மும்பையில் தயாரிக்கப்பட்டு, கடற்படை வசம் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டது. அடுத்த ஆண்டு இறுதிக்குள் மீதமுள்ள 5 பி17ஏ கப்பல்களும் படிப்படியாக கடற்படை சேவையில் இணையும் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.