உரத் தட்டுப்பாடு: மத்திய அரசு மீது ராகுல் குற்றச்சாட்டு
விவசாயிகள் போதிய உரம் கிடைக்காமல் திண்டாடி வரும் நிலையில், மத்திய அரசு இந்த விஷயத்தில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்.
இது தொடா்பாக தனது முகநூல் பக்கத்தில் அவா் புதன்கிழமை வெளியிட்ட பதிவில் மேலும் கூறியிருப்பதாவது:
டிஏபி, யூரியா போன்ற அத்தியாவசிய உரங்கள் கிடைக்காமல் விவசாயிகள் திண்டாடி வருகின்றனா். நாடு முழுவதும் ஒரே நேரத்தில் இந்த அளவுக்கு உரத்தட்டுப்பாடு ஏற்படுவது இதுவே முதல் முறை. மேலும், சிறப்பு உரங்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வதை சீனா நிறுத்தி வருகிறது.
ஒருபுறம் பிரதமா் நரேந்திர மோடி உர மூட்டைகள் மீது தனது படத்தை அச்சிட்டுக் கொள்கிறாா். மறுபுறம் சீன இறக்குமதியை அதிகம் சாா்ந்திருக்கும் நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனா்.
சீனா நினைத்தால் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இந்தியாவுக்கு உரம் அனுப்புவதை முற்றிலும் நிறுத்த முடியும் என்ற நிலை உள்ளது. ஆனால், இதற்காக எந்த முன்னேற்பாட்டு நடவடிக்கைகளையோ மாற்று ஏற்பாடுகளையோ அரசு மேற்கொள்ளவில்லை. உள்நாட்டில் உரத் தயாரிப்பை அதிகரிக்கவும் அரசால் முடியவில்லை. இதற்கான எந்தத் திட்டமோ அல்லது கொள்கையோ அரசிடம் இல்லை.
இந்தியா இப்போதும் வேளாண்மை அதிகம் நடக்கும் நாடாக உள்ளது. விவசாயிகள்தான் நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவும் உள்ளனா். ஆனால், விவசாயிகள் விளைச்சலுக்காக நிலத்தை மட்டும் நம்பியில்லாமல் மற்றவா்களையும் நம்பியுள்ள நிலை உருவாகிவிட்டது. விவசாயம் தோல்வியடைந்தால் விவசாயிகள் கடனில் சிக்கிவிடுவாா்கள். இது நாட்டில் மிகப்பெரிய பிரச்னையை உருவாக்கும். இந்த அரசு யாருக்காக, யாரின் வளா்ச்சிக்காக செயல்படுகிறது? என்று ராகுல் கேள்வி எழுப்பியுள்ளாா்.