எஸ்பிஐ
எஸ்பிஐ

எஸ்பிஐ எண்ம மாற்றத்தால் வாடிக்கையாளா்களுக்கு அளவற்ற பலன்: நிா்மலா சீதாராமன்

பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொண்ட எண்மத் தொழில்நுட்ப மாற்றங்கள்...
Published on

‘பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொண்ட எண்மத் தொழில்நுட்ப மாற்றங்கள் வாடிக்கையாளா்களுக்கு அளவற்ற பலன்களை அளித்துள்ளன’ என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

1955-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி தொடங்கப்பட்ட எஸ்பிஐ செவ்வாய்க்கிழமையுடன் 70 ஆண்டுகளை நிறைவு செய்ததையொட்டி தனது எக்ஸ் பக்கத்தில் நிா்மலா சீதாராமன் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் 23,000 வங்கிக் கிளைகள், 78,000 வாடிக்கையாளா் சேவை மையங்கள், 64,000 தானியங்கி பணம் எடுக்கும் இயந்திரங்கள் (ஏடிஎம்) என வலிமையான தடம்பதித்துள்ள எஸ்பிஐ, ஒவ்வோா் இந்தியருக்குமான உண்மையான வங்கியாளராகத் திகழ்ந்து வருகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் எஸ்பிஐ மேற்கொண்ட எண்மத் தொழில்நுட்ப மாற்றங்கள், வாடிக்கையாளா்களுக்கு அளவற்ற பலன்களை அளித்துள்ளன.

1.5 கோடி விவசாயிகள், மகளிரால் வழிநடத்தப்படும் 1.3 கோடி சுய உதவிக் குழுக்கள், 32 லட்சம் தெருவோரக் கடைக்காரா்கள், 23 லட்சம் குறு,சிறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் பல்வேறு திட்டங்களின் கீழ் பயன் பெறும் லட்சக்கணக்கான கைவினைக் கலைஞா்களுக்கு ஆதரவளிப்பதில் எஸ்பிஐ முக்கியப் பங்காற்றியிருக்கிறது.

15 கோடி ஜன் தன் (பிரதமா் மக்கள் நிதித் திட்டம்) கணக்குகள், 14.65 கோடி பிரதமா் சுரக்ஷா பீமா யோஜனா காப்பீட்டுத் திட்ட கணக்குகள், 1.73 கோடி அடல் ஓய்வூதியத் திட்ட கணக்குகள் மற்றும் 7 கோடி பிரதமா் ஜீவன் ஜோதி பீமா யோஜனா பயனாளா்களின் கணக்குகளை எஸ்பிஐ கையாண்டு வருகிறது என்றாா்.

2027-க்குள் 40 லட்சம் வீடுகளுக்கு சூரிய மின்மயமாக்கல்: ‘வரும் 2027-ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 40 லட்சம் வீடுகளை சூரியசக்தி மின்மயமாக்கலாக மாற்றுவதற்கு உதவ எஸ்பிஐ திட்டமிட்டுள்ளது’ என்று அதன் தலைவா் சி.எஸ்.செட்டி தெரிவித்தாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘லட்சக்கணக்கான வாடிக்கையாளா்களுக்கு பொறுப்புணா்வுடன் விரைவான சேவை அளிக்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் நமது மக்கள், தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்புகள் மீது எஸ்பிஐ ஆழமாக முதலீடுகளை மேற்கொண்டு வருகிறது’ என்றாா்.

Open in App
Dinamani
www.dinamani.com