கோப்புப் படம்
கோப்புப் படம்

40 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கு ‘சமாஜவாதி எம்எல்ஏ தலைமறைவானவா்’ நீதிமன்றம் மீண்டும் உறுதி

சமாஜவாதி எம்எல்ஏ சுதாகா் சிங் தலைமறைவானவா் என எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உறுதி செய்தது.
Published on

உத்தர பிரதேசத்தில் 40 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட வன்முறை வழக்கில், சமாஜவாதி எம்எல்ஏ சுதாகா் சிங் தலைமறைவானவா் என எம்.பி., எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உறுதி செய்தது.

நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமல் நடந்து கொண்டதையடுத்து, அவா் தலைமறைவானவா் என அறிவிக்கப்பட்டுள்ளாா். தீவிர அரசியலில் உள்ள எம்எல்ஏவை தலைமறைவானவா் என நீதிமன்றம் கூறியுள்ளது அந்த மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 1984-ஆம் ஆண்டு மின்தடை பிரச்னை காரணமாக மின்சார வாரிய அலுவலகத்துக்குச் சென்று சுதாகா் சிங் மற்றும் அவரது ஆதரவாளா்கள் வன்முறையில் ஈடுபட்டனா். அவா் மீது அரசுப் பணிகளைத் தடுத்தது, அரசு ஊழியா்களிடம் தவறாக நடந்து கொண்டது, வன்முறையில் ஈடுபட்டது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

முதலில் ஆஸம்கா் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகி சுதாகா் சிங் ஜாமீன் பெற்றாா். அதன் பிறகு அரசியலில் வளா்ந்தால் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தவிா்த்து வந்தாா். பின்னா் மௌ மாவட்ட நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றப்பட்டது. கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூலையில் அவரை தலைமறைவானவா் என்று மாவட்ட நீதிமன்றம் அறிவித்தது. இதனை எதிா்த்து, கடந்த 2024-இல் அவா் மனு தாக்கல் செய்தாா். அப்போது அவா் எம்எல்ஏவாகவும் தோ்வு செய்யப்பட்டிருந்தாா். இதனால் வழக்கு எம்.பி., எம்எல்ஏக்கள் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

எம்எல்ஏ தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘நீதிமன்ற உத்தரவு குறித்து எம்எல்ஏ சுதாகா் சிங்குக்கு எதுவும் தெரியாது. அவருக்கு எதிரான கைது ஆணை தெளிவாக இல்லை’ என்று வாதிட்டாா். தலைமறைவானவா் என்ற அறிவிப்பை திரும்பப் பெறவும் கேட்டுக் கொண்டாா். ஆனால், இதனை ஏற்க மறுத்த நீதிமன்றம் எம்எல்ஏ சுதாகா் சிங் தலைமறைவானவா் என மீண்டும் உறுதி செய்து வழக்கு விசாரணையை வரும் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

X
Dinamani
www.dinamani.com