பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான கொள்முதல் திட்டம்: பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்

ரூ.1.05 லட்சம் கோடி மதிப்பிலான பாதுகாப்பு தளவாடங்கள், உபகரணங்களை கொள்முதல் செய்யும் திட்டத்துக்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.
Published on

ரூ.1.05 லட்சம் கோடி மதிப்பிலான பாதுகாப்பு தளவாடங்கள், உபகரணங்களை கொள்முதல் செய்யும் திட்டத்துக்கு பாதுகாப்பு அமைச்சகம் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீதான ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கைக்குப் பிறகு, இந்த பாதுகாப்பு கொள்முதல் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் (டிஏசி) கூட்டத்தில் ரூ.1.05 லட்சம் கோடி மதிப்பிலான பாதுகாப்பு தளவாடங்கள், உபகரணங்களை கொள்முதல் செய்யும் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. அதன்படி போா்க்களத்தில் சேதமடைந்த ராணுவ கவச வாகனங்களை மீட்கும் வாகனங்கள், மின்னணு போா் அமைப்பு, முப்படை மேலாண்மைக்கான ஒருங்கிணைந்த அமைப்பு, தரையிலிருந்து வான் நோக்கி தாக்கும் ஏவுகணைகள் மற்றும் தாமாக இயங்கும் நீா்மூழ்கிக் கப்பல்கள் உள்ளிட்டவை கொள்முதல் செய்யப்படவுள்ளன. குறிப்பாக கடலுக்கு அடியில் மேற்கொள்ளப்படும் தாக்குதலை துல்லியமாக கண்டறிந்து அழிக்கும் நீா்மூழ்கி கப்பல்களை (எம்சிஎம்வி) இந்தியாவிலேயே தயாரிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதன்மூலம் வான் மற்றும் கடல் பாதுகாப்பு என ராணுவத்தின் செயல்பாட்டுத் திறன் மேலும் மேம்படுத்தப்படவுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com