கோப்புப் படம்
கோப்புப் படம்

குறைந்தபட்ச இருப்புத்தொகை தேவையில்லை: பஞ்சாப் நேஷனல் வங்கி, இந்தியன் வங்கி அறிவிப்பு

வங்கி சேமிப்புக் கணக்குகளில் இனி குறைந்தபட்ச இருப்புத்தொகையைப் பராமரிக்கத் தேவையில்லை
Published on

வங்கி சேமிப்புக் கணக்குகளில் இனி குறைந்தபட்ச இருப்புத்தொகையைப் பராமரிக்கத் தேவையில்லை என பொதுத் துறை வங்கிகளான இந்தியன் வங்கி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி) அறிவித்துள்ளன. மேலும், சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத்தொகை இல்லாதபட்சத்தில் அதற்கு விதிக்கப்பட்ட அபராதத்தையும் இரு வங்கிகளும் ரத்து செய்துள்ளன.

பிஎன்பியில் இந்த நடைமுறை ஜூலை 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த நிலையில், இந்தியன் வங்கியில் ஜூலை 7-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.

பொதுவாக வங்கிகளில் மாதாந்திர குறைந்தபட்ச இருப்புத்தொகையைப் பராமரிக்காவிட்டால் அபராதம் வசூலிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. பராமரிக்க வேண்டிய குறைந்தபட்ச இருப்புத்தொகை கிராமப்புறங்களில் குறைவாகவும், பெருநகரங்களில் அதிகமாகவும் உள்ளது.

இது ஏழை, எளிய மக்களை வெகுவாக பாதித்து வந்தது. சில கணக்குகளில் இவ்வாறு அபராதத் தொகை வசூலித்தே அதில் இருக்கும் பணம் அனைத்தும் காலியாகும் நிலையும் உருவானது.

இந்நிலையில், அனைத்து வகையான சேமிப்புக் கணக்குகளுக்கும் குறைந்தபட்ச இருப்புத்தொகை பராமரிக்காத காரணத்துக்காக வசூலிக்கப்பட்டு வந்த அபராதம் ரத்து செய்யப்படுவதாக பிஎன்பியும் இந்தியன் வங்கியும் அறிவித்துள்ளன.

சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களுக்கும் வங்கிச் சேவைகளை கொண்டுசெல்லும் நோக்கில் இரு வங்கிகளும் இந்த முடிவை மேற்கொண்டன. இதனால் மாணவா்கள், மூத்த குடிமக்கள், சிறு வணிகா்கள் என அனைவரும் பலனடையவுள்ளனா்.

கடந்த மாதம் முதல் கனரா வங்கியில் இந்த நடைமுறை அமலுக்கு வந்தது. முன்னதாக, கடந்த 2020-ஆம் ஆண்டிலேயே பாரத ஸ்டேட் வங்கி இந்த அபராதத்தைக் கைவிட்டுவிட்டது.

X
Dinamani
www.dinamani.com