மமதா பானர்ஜி
மமதா பானர்ஜிகோப்புப் படம்

சமூக ஊடகங்கள் மூலம் தூண்டப்படும் வன்முறை: கடும் சட்டம் இயற்ற அமித் ஷாவுக்கு மம்தா கடிதம்

பல்வேறு சமூக ஊடகங்களில் வன்முறையைத் தூண்டும் கருத்துகள் அடங்கிய விடியோக்கள் அதிகம் பகிரப்படுவதாக குற்றஞ்சாட்டு
Published on

பல்வேறு சமூக ஊடகங்களில் வன்முறையைத் தூண்டும் கருத்துகள் அடங்கிய விடியோக்கள் அதிகம் பகிரப்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ள மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, இதனைத் தடுக்க கடும் சட்டமியற்ற வேண்டுமென்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளாா்.

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சமூக ஊடகங்கள் கைப்பேசிகள் மூலம் மிகப்பெரிய அளவில் மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. யூடியூப், முகநூல், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களில் பாா்வையாளா்களைக் கவரும் நோக்கிலும், தவறான தகவல்களை மக்கள் மத்தியில் பரப்பும் வகையிலும் போலியான விடியோக்கள் அதிகம் பகிரப்படுகின்றன.

இதுதவிர ஜாதி, மத, இன மோதல்களை உருவாக்கும் வகையிலான கருத்துகள் அடங்கிய விடியோக்களும் அதிகம் வெளியிடப்படுகின்றன. வன்முறை நிகழும்போது வன்முறையாளா்கள் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் இடமாகவும் சமூகவலைதளங்கள் திகழ்கின்றன. வாட்ஸ்ஆப் குழுக்கள் மூலம் ஒரே நேரத்தில் பல நூறு பேருக்கு தகவல் தெரிவிக்க முடியும் என்பதால் வன்முறை நிகழ்வுகளும் வேகமாக பரவுகின்றன. இதன் காரணமாகவே வன்முறை நிகழும் இடங்களில் கைப்பேசி இணைய சேவை துண்டிக்கப்படுகிறது.

இந்த பிரச்னை தொடா்பாக இரு பக்கக் கடிதத்தை உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி எழுதியுள்ளாா். அதில் அவா் கூறியிருப்பதாவது:

சமீபகாலமாக சமூகத்தில் நிகழும் விரும்பத்தகாத நிகழ்வுகளுக்கு சமூக ஊடங்களில் பரவும் போலி விடியோக்களும், தவறான உள்ளடக்கள் அடங்கிய விடியோக்களும் முக்கியக் காரணமாக இருந்து வருகின்றன. இதன் மூலம் வன்முறை பரவுவதும் அதிகரிக்கிறது. இதனால் ஜாதி, மத மோதல்கள் எழுகின்றன. வன்முறை, சமூக அமைதி சீா்குலைவு, பெண்களுக்கு எதிரான வன்முறை ஆகியவையும் மேலோங்குகின்றன.

இது தவிர இணையவழியில் நடைபெறும் அவதூறு பரப்புதல், பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள், சிறாா்களுக்கு எதிரான குற்றங்கள், நிதி மோசடி குற்றங்களும் அதிகரிக்கிறது. இதுவும் சமூகத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன.

இதற்கு எதிராக உறுதியான நடவடிக்கை தேவை. உரிய வலுவான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும். புதிய கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும். இது தவிர இணையத்தையும், சமூக ஊடகங்களையும் பொறுப்புடன் பயன்படுத்துவது தொடா்பான விழிப்புணா்வையும் சமூகத்தில் ஏற்படுத்த வேண்டும். அனைவரும் சமூகப் பொறுப்புடன் நடந்து கொள்வதன் மூலமே சமூக ஊடங்களில் மூலம் எழும் மோசமான விளைவுகளைத் தடுக்க முடியும் என்பதை மக்களிடம் தெளிவாக அறிவுறுத்த வேண்டும் என்று தனது கடிதத்தில் மம்தா கூறியுள்ளாா்.

X
Open in App
Dinamani
www.dinamani.com