
அகமதாபாத் விமான விபத்தில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர் இழப்பீடு பெற ஏர் இந்தியா கடுமையான விதிகளை புகுத்துவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து வெளிநாட்டுப் பயணிகள் உள்பட 242 பேருடன் கடந்த ஜூன் 12 ஆம் தேதி லண்டனுக்கு புறப்பட்ட ஏா் இந்தியா விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அருகில் உள்ள மருத்துவக் கல்லூரி விடுதிக் கட்டடத்தின் மீது விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் பயணித்த 241 பேர் உள்பட 275 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து நாட்டிலேயே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடாக ரூ.1 கோடி தரப்படும் என்று தற்போதைய ஏர் இந்தியா உரிமையாளரான டாடா நிறுவனம் தெரிவித்தது. மேலும், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு அனைத்து மருத்துவ உதவிகளும் வழங்கப்படும், விமானம் விழுந்து நொறுங்கிய பிஜே மருத்துவக் கல்லூரியின் விடுதியும் புதிதாக கட்டித் தரப்படும் எனவும் கூறியது. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூ. 25 லட்சம் வழங்கப்படும் என்று தெரிவித்தது.
விபத்தில் உயிரிழந்தவர்களில் 54 பேர் பிரிட்டனைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் தற்போது இழப்பீடுத் தொகையைப் பெற கடுமையான விதிகள் விதிக்கப்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது.
அகமதாபாத்தைத் தலைமையிடமாகக் கொண்ட நானாவதி என்ற நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் பிரிட்டன் சட்ட நிறுவனமான ஸ்டீவர்ட்ஸ், பிரிட்டனைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சார்பாக ஏர் இந்தியா நிறுவனத்திடம் இழப்பீடு குறித்து தொடர்பு கொண்டபோது மிரட்டப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் துயரத்தில் இருக்கும் நிலையிலும் விரிவான படிவத்தை முழுமையாக நிரப்பித் தர வேண்டும், குறிப்பாக குடும்பத்தின் நிதி சார்ந்த தகவல்களைத் தர வேண்டும், இல்லையெனில் இழப்பீடு கிடையாது என்று ஏர் இந்தியா கூறுவதாகத் தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்கள் படிவத்தை நிரப்ப எந்த வழிகாட்டுதலும் இல்லாமல் நிரப்ப கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் அதில் உள்ள விதிமுறைகளின் சட்டரீதியான தாக்கங்கள் குறித்து அவர்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளது. இதன் மூலமாக இழப்பீட்டுத் தொகையைக் குறைக்க ஏர் இந்தியா முயற்சிப்பதாகவும் இழப்பீடு தொகையைப் பெற பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏர் இந்தியா நிறுவனம் தொடர்ந்து அழுத்தம் கொடுப்பதாகவும் அந்த நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது.
ஆனால் ஏர் இந்தியா நிறுவனம் தரப்பில் இந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
"ஏர் இந்தியா மீது இழப்பீடு தொடர்பான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றது, தவறானது. பாதிக்கப்பட்ட சில குடும்பத்தினரிடம் மட்டுமே அவர்களது உறவு முறைகள் பற்றி அறியவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியாக இழப்பீடு சென்று சேர வேண்டும் என்பதற்காகவும் மட்டுமே தகவல்கள் கேட்கப்படுகிறது. ஆனால் நாங்கள் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவாக இருக்கிறோம். அவர்களுக்கான நேரத்தைக் கொடுக்கிறோம்" என்று கூறியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.