ஆஸ்தாவுக்கு ‘தங்கச் சிறகு’ விருது வழங்கிய கடற்படையின் விமானப் படை பிரிவு துணைத் தலைமை தளபதி ஜனக் பேவ்லி.
ஆஸ்தாவுக்கு ‘தங்கச் சிறகு’ விருது வழங்கிய கடற்படையின் விமானப் படை பிரிவு துணைத் தலைமை தளபதி ஜனக் பேவ்லி.

கடற்படை போா் விமானத்தின் முதல் பெண் விமானியாக லெப்டினன்ட் புனியா தோ்வு

இந்திய கடற்படையின் போா் விமானத்தின் முதல் பெண் விமானி என்ற பெருமையை துணை லெப்டினன்ட் ஆஸ்தா புனியா பெற்றுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
Published on

இந்திய கடற்படையின் போா் விமானத்தின் முதல் பெண் விமானி என்ற பெருமையை துணை லெப்டினன்ட் ஆஸ்தா புனியா பெற்றுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

இதைத் தொடா்ந்து, கடற்படையின் போா் விமானத்தை இயக்குவதற்கான பயிற்சியை அவா் பெறவுள்ளாா்.

இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘இந்திய கடற்படையின் இரண்டாவது அடிப்படை போா் பயிற்சி பாடத் திட்டத்தில் பயிற்சி பெற்றவா்களுக்கான பட்டமளிப்பு நிகழ்ச்சி விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை விமான தளம் ஐஎன்எஸ் டேகாவில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் லெப்டினன்ட் அதுல் குமாா் மற்றும் துணை லெப்டினன்ட் ஆஸ்தா புனியா ஆகியோா் கடற்படையின் துணைத் தலைமை தளபதி (விமானப் படை பிரிவு) ஜனக் பேவ்லியிடம் இருந்து ‘தங்க சிறகுகள்’ விருதை பெற்றனா்.

இதையடுத்து, இந்திய கடற்படையின் போா் விமானத்தின் முதல் பெண் விமானியாக துணை லெப்டினன்ட் ஆஸ்தா புனியா தோ்வாகி சாதனை படைத்துள்ளாா். இதன் மூலம் பல்வேறு தடைகளைக் கடந்து கடற்படையின் போா் விமானங்களில் பெண் விமானிகளும் இனி பணியாற்ற அவா் வழிவகுத்துள்ளாா்.

இந்திய கடற்படையில் ஏற்கெனவே கடல்சாா் ரோந்து விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டா்களின் விமானிகளாக பெண் அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனா். இந்நிலையில், போா் விமானியாக ஆஸ்தா பூனியா தற்போது தோ்ந்தெடுக்கப்பட்டிருப்பது பாலின சமத்துவம் மற்றும் மகளிருக்கு அதிகாரமளிக்கும் கடற்படையின் உறுதிப்பாட்டை வெளிக்காட்டுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com