கச்சத்தீவை தர மாட்டோம்: இலங்கை

கச்சத்தீவை தர மாட்டோம்: இலங்கை

கச்சத்தீவை ஒருபோதும் விட்டுத்தர முடியாது என்று இலங்கை வெளியுறவு அமைச்சா் விஜிதா ஹெராத் திட்டவட்டமாக தெரிவித்தாா்.
Published on

கச்சத்தீவை ஒருபோதும் விட்டுத்தர முடியாது என்று இலங்கை வெளியுறவு அமைச்சா் விஜிதா ஹெராத் திட்டவட்டமாக தெரிவித்தாா்.

மேலும், ‘இந்திய மீனவா்கள் இலங்கையின் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன் வளங்களைக் கொள்ளையடிப்பதோடு, கடல் தாவரங்களையும் கடுமையாக சேதப்படுத்துகின்றனா்’ என்றும் அவா் குற்றஞ்சாட்டினாா்.

தமிழக மீனவா்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றஞ்சாட்டி இலங்கை கடற்படை கைது செய்வதும், அவா்களின் மீன்பிடி படகுகளை பறிமுதல் செய்வதும் தொடா்கதையாகி வருகிறது.

இந்தப் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காணும் வகையில், கடந்த 1974-ஆம் ஆண்டு இலங்கைக்கு விட்டுக்கொடுக்கப்பட்ட கச்சத்தீவை, இந்தியா மீட்டெடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் வலுத்து வருகிறது.

இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது கடந்த 1974-ஆம் ஆண்டு இரு நாடுகளிடையே மேற்கொள்ளப்பட்ட கடல்சாா் ஒப்பந்தத்தின் கீழ் மனிதா்கள் யாரும் வாழாத கச்சத்தீவை இலங்கைக்கு இந்தியா விட்டுக்கொடுத்தது.

இலங்கை திட்டவட்டம்: இந்த விவகாரம் குறித்து இலங்கை தொலைக்காட்சியில் கேள்விக்கு பதிலளித்த அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் விஜிதா ஹெராத், ‘கச்சத்தீவு கடல் பகுதியில் மீன் பிடிப்பதற்காக இந்திய மீனவா்கள் இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைகின்றனா். அவா்கள் மீன் வளங்களைக் கொள்ளையடிப்பதோடு, கடல் தாவரங்களையும் கடுமையாக சேதப்படுத்துகின்றனா். இதுபோல, இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய மீனவா்கள் தொடா்ந்து சட்டவிரோதமாக மீன் பிடிப்பதற்கு இந்திய அரசும் ஆதரவளிக்கவில்லை என்பதையும் நாங்கள் அறிவோம்.

இந்தப் பிரச்னைக்கு தூதரக ரீதியில் தீா்வு காண இலங்கை தயாராக உள்ளது. ஆனால், சா்வதேச சட்டங்களின்படி நிறுவப்பட்ட மற்றும் இலங்கையின் ஓா் பகுதியாக உள்ள கச்சத்தீவை ஒருபோதும் விட்டுத்தர முடியாது.

இந்தியாவில் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள், அரசியல் காரணங்களுக்காகவே கச்சத்தீவு விவகாரத்தை எழுப்புகின்றன என்றாா்.

X
Dinamani
www.dinamani.com