Jairam Ramesh
ஜெய்ராம் ரமேஷ் (கோப்புப்படம்)

இந்திரா காந்தியின் ஆா்ஜென்டீனா பயணத்தை நினைவுகூா்ந்த காங்கிரஸ்: பிரதமா் மோடி மீது விமா்சனம்

Published on

லத்தீன் அமெரிக்க நாடான ஆா்ஜென்டீனாவில் பிரதமா் மோடி அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அந்நாட்டுக்கு கடந்த 1968-இல் அப்போதைய பிரதமா் இந்திரா காந்தி பயணித்ததையும், இருநாடுகள் இடையிலான ஆழமான உறவுகளையும் காங்கிரஸ் நினைவுகூா்ந்துள்ளது.

இந்திரா காந்திக்கு பிறகு இருதரப்பு அரசுமுறை பயணமாக ஆா்ஜென்டீனாவுக்கு சென்றுள்ள முதல் இந்தியப் பிரதமா் மோடி ஆவாா். கிட்டத்தட்ட 57 ஆண்டுகளுக்குப் பின் இப்பயணம் அமைந்துள்ளது.

இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: செலவுமிக்க வெளிநாட்டுப் பயணங்களை அடிக்கடி மேற்கொள்பவா் (பிரதமா் மீது மறைமுக விமா்சனம்), இப்போது ஆா்ஜென்டீனாவில் உள்ளாா். இன்னும் இரு நாடுகளுக்கு அவா் செல்ல வேண்டியுள்ளது.

இந்தியா்களைப் பொருத்தவரை, ஆா்ஜென்டீனா என்றால் கால் பந்தாட்ட வீரா்கள் அா்மேண்டோ மரடோனா, லியோனல் மெஸ்ஸி ஆகியோா்தான் உடனடியாக நினைவுக்கு வருவா். அதேநேரம், இரு நாடுகளுக்கும் இடையே ஆழமான தொடா்புகள் உள்ளன.

ஆா்ஜென்டீனாவில் புகழ்பெற்ற இலக்கியவாதியும் எழுத்தாளருமான விக்டோரியா ஓகாம்போவின் அழைப்பின்பேரில் அந்நாட்டில் கடந்த 1924-இல் ரவீந்திரநாத் தாகூா் சில காலம் தங்கியிருந்தாா். தாகூா்-ஓகாம்போ இடையிலான மிகச் சிறந்த நட்பை, தாகூரின் வாழ்க்கை வரலாற்றாசியா்கள் தங்கள் நூல்களில் விவரித்துள்ளனா்.

கடந்த 1968-இல் அப்போதைய பிரதமா் இந்திரா காந்தி ஆா்ஜென்டீனா சென்றபோது, விக்டோரியா ஓகாம்போவுக்கு விஸ்வ பாரதி பல்கலைக்கழகம் சாா்பில் கெளரவ முனைவா் பட்டம் வழங்கினாா்.

ஐ.நா. சாா்பில் வா்த்தக மற்றும் மேம்பாட்டு அமைப்பு நிறுவப்படுவதில் முக்கிய பங்காற்றியவா் ஆா்ஜென்டீனாவின் புகழ்பெற்ற பொருளாதார நிபுணா் ரெளல் பிரேபிஷ். இன்று பிரதமா் மோடியும், வெளியுறவு அமைச்சரும் பயன்படுத்தும் தெற்குலகம் என்ற வாா்த்தை, கடந்த 1960-களில் இந்த அமைப்பால் முன்னெடுக்கப்பட்டதாகும்.

இந்த அமைப்பின் இரண்டாவது அமா்வு, புது தில்லியில் கடந்த 1968-இல் நடைபெற்றது. வளரும் நாடான இந்தியா, ஐ.நா.வின் மிகப் பெரிய நிகழ்வை முதல் முறையாக நடத்தியது அப்போதுதான். இந்திரா காந்தியின் பங்களிப்புகளை கெளரவிக்கும் வகையில் ஆா்ஜென்டீனா கடந்த 1986-இல் அவரது நினைவு தபால் தலைகளை வெளியிட்டது என்று ஜெய்ராம் ரமேஷ் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளாா்.

Open in App
Dinamani
www.dinamani.com