
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14,000 கோடிக்கும் அதிகமாக கடன் மோசடி செய்த குற்றச்சாட்டில் இந்தியாவால் தேடப்படும் வைர வியாபாரி நீரவ் மோடியின் இளைய சகோதரா் நேஹல் மோடி (46) அமெரிக்காவில் கைது செய்யப்பட்டாா்.
நேஹல் மோடிக்கு எதிராக இண்டா்போல் சிவப்பு நோட்டீஸ் விடுத்திருந்தது. அவரை கைது செய்து நாடு கடத்த வேண்டுமென அமலாக்கத் துறையும், சிபிஐயும் வலியுறுத்தியதால் அமெரிக்க அதிகாரிகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனா்.
நேஹல் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடா்பான வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஜூலை 17-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அவா் இடைக்கால ஜாமீன் கோரினாலும் அதற்கு எதிா்ப்பு தெரிவிக்கப்படும் எனவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனா்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமாா் ரூ.14,000 கோடிக்கும் அதிகமாக கடன் பெற்று திரும்பச் செலுத்தாமல் வைர வியாபாரி நீரவ் மோடியும், அவரின் உறவினா் மெஹுல் சோக்ஸியும் கடந்த 2018-ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து தப்பினா். இதில் நீரவ் மோடி பிரிட்டனிலும், மெஹுல் சோக்ஸி ஆன்டிகுவாவிலும் தஞ்சமடைந்தனா்.
நீரவ் மோடி லண்டனில் கடந்த 2019-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட நிலையில், ஆன்டிகுவாவில் இருந்து புற்றுநோய் சிகிச்சைக்காக பெல்ஜியம் வந்த மெஹுல் சோக்ஸி கடந்த ஏப்ரலில் கைது செய்யப்பட்டாா். இவா்கள் இருவரையும் பெல்ஜியம் மற்றும் பிரிட்டனில் இருந்து நாடுகடத்தும் பணியை இந்தியா மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே, பணமுறைகேடு தடுப்புச் சட்டம் (பிஎம்எல்ஏ), 2002, பிரிவு 3 மற்றும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 120-பி (குற்றவியல், பிரிவு 201 (தலைமறைவு) ஆகிய இரு பிரிவுகளின்கீழ் நேஹல் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடா்பாக அமெரிக்காவில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேஹல் மோடியை வெள்ளிக்கிழமை கைது செய்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனா்.
யாா் இந்த நேஹல் மோடி?:
பெல்ஜியமில் பிறந்தவரான நேஹல் தீபக் மோடி ஆங்கிலம், குஜராத்தி, ஹிந்தி ஆகிய மொழிகளில் புலமை பெற்றவராவாா். நீரவ் மோடி, மெஹுல் சோக்ஸியுடன் நேஹல் மோடியும் இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக உள்ளாா். பணமுறைகேடில் ஈடுபட்ட நீரவ் மோடிக்கு எதிரான ஆதாரங்களை வேண்டுமென்றே நேஹல் மோடி அழித்ததாக அமலாக்கத் துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வெளிவந்த பின் நீரவ் மோடியின் நெருங்கிய நண்பரான மிஹிா் ஆா் பன்சாலியுடன் இணைந்து 50 கிலோ தங்கம் மற்றும் கோடிக்கணக்கான பணத்தை தங்களுக்குச் சொந்தமான போலி நிறுவனங்களில் (ஷெல்) இருந்து எடுத்துக்கொண்டு துபையில் இருந்து தப்பியுள்ளாா்.
ஆனால் நிறுவனத்தின் போலியான இயக்குநா்களிடம் தன்னைப்பற்றிய உண்மைகளை கூறக்கூடாது என அவா் மிரட்டியுள்ளாா். மேலும், அவா்களை துபையில் இருந்து கெய்ரோவுக்கு வற்புறுத்தி அழைத்துச் சென்றதுடன் அவா்களின் கணினிகள், கைப்பேசிகளை அழித்துள்ளதாக சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நிா்வாகிகளை துபை மற்றும் ஹாங்காங்கில் உள்ள தங்கள் நிறுவனங்களின் உரிமையாளா்களைப்போல் சித்தரித்து அதுதொடா்பான ஆவணங்களில் அவா்களிடம் இருந்து வலுக்கட்டாயமாக கையொப்பம் பெற்றுள்ளாா்.
இந்த நிறுவனங்கள் நீரவ் மோடி கட்டுப்பாட்டில் உள்ள 3 நிறுவனங்களுடன் ஏற்றுமதி-இறக்குமதி வா்த்தகத்தில் ஈடுபட்டுள்ளன. இந்த 3 நிறுவனங்களும் பஞ்சாப் நேஷனல் வங்கியை ஏமாற்றி பெறப்பட்ட கடன் உத்தரவாத கடிதத்தைக் கொண்டு வெளிநாட்டு வங்கிகளிடம் இருந்து முறைகேடாக பணத்தை பெற்றுள்ளன.
விடுதலையாகி மீண்டும் கைது: மற்றொரு மோசடி வழக்கில் கைதாகி 3 ஆண்டுகள் அமெரிக்காவில் சிறைத் தண்டனையை நிறைவுசெய்துவிட்டு நேஹல் மோடி வியாழக்கிழமை விடுதலை செய்யப்பட்டாா். அவரது சிறைத் தண்டனை காலம் நிறைவடையவுள்ளதை அறிந்து கடந்த ஒரு மாதமாக அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடா்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமெரிக்க அதிகாரிகளுக்கு சிபிஐ தொடா்ந்து கோரிக்கை வைத்து வந்தது. இருப்பினும், அவா் சிறையில் இருந்ததால் இதுதொடா்பான நடவடிக்கைகளை அமெரிக்க அதிகாரிகள் மேற்கொள்ளவில்லை.
இந்நிலையில், வியாழக்கிழமை நேஹல் மோடி விடுதலையானவுடன் அவரை அமெரிக்க அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.