
கேரளத்தில் கார் வெடித்த சம்பவத்தில் தீக்காயமடைந்த 2 சிறுவர்களும் சிகிச்சை பலனின்றி பலியாகினர்.
கேரள மாநிலம், வடக்கு பாலக்காடு மாவட்டத்தில் வீட்டின் முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரை வெள்ளிக்கிழமை மாலை பெண் ஒருவர் இயக்க முயற்சித்தார். அப்போது அந்த கார் திடீரென வெடித்து தீப்பிடித்தது. இந்த சம்பவத்தில் தாய் மற்றும் 3 சிறுவர்களுக்கும் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டன. உடனே அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் போல்பல்லியைச் சேர்ந்த ஆல்ஃப்ரட் (6) மற்றும் எமிலினா (4) ஆகியோர் பலியாகினர். 60 சதவிகித தீக்காயங்களுடன் தாய் எல்சியும் (39) அவரது மூத்த மகளும் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர். ஆனால் அவர்களின் நிலை தற்போது மோசமாக இல்லை என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கார் வெடிப்புக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
"ஆரம்பத்தில், காரில் இருந்த எரிவாயு சிலிண்டர் வெடித்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. இருப்பினும், பின்னர் அது பெட்ரோல் கார் என்பது உறுதி செய்யப்பட்டது. அந்த கார் பழையது என்றும், சிறிது காலமாக பயன்படுத்தப்படவில்லை என்றும் கூறப்படுகிறது," என்று அவர் மேலும் தெரிவித்தார். எல்சியின் கணவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அண்மையில் இறந்தார் என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் கேரளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.