
பெங்களூரில், ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தின் போது நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான சம்பவத்துக்கு ஒட்டுமொத்த அலட்சியமே காரணம் என விசாரணை அறிக்கையில் தகவல்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கோப்பையை ஆர்சிபி அணி வென்றதையடுத்து, பெங்களூரில், ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தின் போது நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான சம்பவத்துக்கு, ஆர்சிபி அணி, கர்நாடக கிரிக்கெட் கழகம், காவல்துறையினரின் ஒட்டுமொத்த அலட்சியமே காரணம் என்று விசாரணை ஆணைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டநெரிசல் சம்பவம் தொடா்பாக விசாரணை நடத்துவதற்கு கா்நாடக உயா்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஜான்மைக்கேல் டிகுன்ஹா தலைமையில் தனிநபா் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்த விசாரணை ஆணையம், முழுமையாக விசாரணை நடத்தி முடித்த நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி ஜான்மைக்கேல் டிகுன்ஹா தனது விசாரணை அறிக்கையை, கா்நாடக முதல்வா் சித்தராமையாவிடம் சமர்ப்பித்தார்.
அந்த அறிக்கையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில், ஆர்பிசி வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வை சரியான முறையில் நடத்த முடியாது என்று நன்கு அறிந்திருந்தும், கர்நாடக கிரிக்கெட் கழகம், ஆர்சிபி அணி, கர்நாடக காவல்துறை என அனைத்துமே அதனை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சி நடைபெற திட்டமிட்ட இடத்தில், எந்த முன்னேற்பாடுகளும், பாதுகாப்பும், கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளும் கையாளப்படவில்லை. ஒருமாத காலமாக, நேரில் பார்த்தவர்களிடம் பெற்ற வாக்குமூலம், சம்பவம் நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு நடத்திய விசாரணையின் மூலம், விசாரணை ஆணையத்துக்கு ஒரு விஷயம் தெளிவாகத் தெரிந்தது, அதுதான், பாதுகாப்பு முன்னேற்பாடுகளில் மிக மோசமான அலட்சியம். ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டம் நடத்தப்பட்ட விளையாட்டு அரங்குக்குள் வெறும் 79 காவலர்கள் மட்டுமே நிறுத்தப்பட்டுள்ளனர். வெளியே ஒருவரும் நிறுத்தப்படவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.
ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தின்போது, கூட்டம் கட்டுக்கடங்காமல் போகும்போதுகூட, அதிகாரிகள் யாரும் உடனடியாக நடவடிக்கையை எடுக்கவில்லை. சம்பவ இடத்துக்கு காவல்துறை இணை ஆணையர் மாலை 4 மணிக்குத்தான் வருகிறார், ஆனால், மாலை 5 மணி வரை காவல்துறை ஆணையருக்கு சம்பவம் பற்றியே தெரிந்திருக்கவில்லை. சம்பவம் நடந்து அப்போது இரண்டு மணி நேரத்துக்கும் மேல் ஆகியிருந்தது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரடியாகப் பார்த்த சாட்சிகள், பாதிக்கப்பட்டவர்கள், சம்பவ இடத்தில் இருந்தவர்கள் என பலரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் இறுதி வடிவமாக, இரண்டு தொகுதிகள் அடங்கிய இந்த அறிக்கை, வெள்ளிக்கிழமை மாலை, கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறுகையில், விசாரணை ஆணைய அறிக்கையில் என்ன கூறப்பட்டுள்ளது என்பதை இதுவரை பார்க்கவில்லை. மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் ஜூலை 17ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.