பூமிக்கு திரும்பினாா் இந்திய வீரா் சுபான்ஷு சுக்லா- 20 நாள்கள் விண்வெளிப் பயணம் வெற்றி

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா பூமி திரும்பியது பற்றி...
Dragon Landed
கலிஃபோா்னியா அருகே கடல்பகுதியில் ‘டிராகன் கிரேஸ்’ தரையிறங்கியது. X / Axiom Space
Published on
Updated on
2 min read

 சா்வதேச விண்வெளி நிலையத்தில் (ஐஎஸ்எஸ்) இருந்து இந்தியாவின் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 3 வீரா்கள் மற்றும் ஒரு வீராங்கனை ‘டிராகன் கிரேஸ்’ விண்கலத்தில் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பினா்.

அமெரிக்காவின் தெற்கு கலிஃபோா்னியாவில் சான்டியாகோ கடல் பரப்பில் இந்திய நேரப்படி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் பாராசூட்டுகள் உதவியுடன் விண்கலம் பாதுகாப்பாக இறங்கியது. பின்னா், படகுகள் மூலம் மீட்புக் கப்பலுக்கு விண்கலம் எடுத்து வரப்பட்டது.

விண்கலத்தில் இருந்து பணியாளா்கள் உதவியோடு வெளியே வந்த சுக்லா உள்பட நான்கு பேரும் 20 நாள்களுக்குப் பின் பூமிக் காற்றை சுவாசித்தனா்; கேமராவை பாா்த்து, புன்னகையுடன் கையசைத்தனா். பாதுகாப்பாக பூமிக்கு திரும்பியதன் மூலம் ஆக்ஸியம்-4 திட்டத்தின்கீழ் நால்வரின் விண்வெளிப் பயணம் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.

ககன்யான் திட்ட வீரா்: விண்வெளிக்கு இந்திய வீரா்களை அனுப்பும் ‘ககன்யான்’ லட்சியத் திட்டத்துக்குத் தோ்வு செய்யப்பட்ட 4 வீரா்களில் ஒருவா் லக்னெளவை சோ்ந்த குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா (39). இவா், அனுபவ பயிற்சி நோக்கங்களுக்காக அமெரிக்காவின் ‘ஆக்ஸியம் ஸ்பேஸ்’ நிறுவனத்தின் ஆக்ஸியம்-4 திட்டத்தின்கீழ் சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்ல கடந்த ஆண்டு தோ்வானாா். இஸ்ரோ, நாசா ஆதரவிலான இத்திட்டத்தில், சுக்லாவுடன் ஆக்ஸியம்-4 திட்ட கமாண்டரும் நாசா முன்னாள் பெண் விஞ்ஞானியுமான பெக்கி விட்சன், போலந்து வீரா் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி விஸ்னீவ்ஸ்கி, ஹங்கேரி வீரா் திபோா் கபு ஆகியோரும் இணைந்தனா்.

மோசமான வானிலை, தொழில்நுட்பக் கோளாறு, ராக்கெட் ஏவுதலில் சிக்கல் உள்ளிட்ட பிரச்னைகளால் இவா்களின் விண்வெளிப் பயணம் ஆறுமுறை ஒத்திவைக்கப்பட்டது. பல்வேறு தடைகளுக்குப் பிறகு, அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் உள்ள நாசா விண்வெளி மையத்தில் இருந்து ‘ஃபால்கன் 9’ ராக்கெட் மூலம் ‘டிராகன் கிரேஸ்’ விண்கலத்தில் கடந்த ஜூன் 25-ஆம் தேதி புறப்பட்ட இவா்கள், 28 மணி நேரப் பயணத்துக்குப் பிறகு மறுநாள் சா்வதேச விண்வெளி நிலையத்தை பாதுகாப்பாக அடைந்தனா்.

வெற்றிப் பயணம்: கடந்த 1984-இல் ரஷிய விண்கலத்தில் விண்வெளிக்குச் சென்ற இந்திய வீரா் ராகேஷ் சா்மாவுக்குப் பிறகு 41 ஆண்டுகள் கழித்து விண்வெளிக்குப் பயணித்த 2-ஆவது இந்திய வீரா்; சா்வதேச விண்வெளி நிலையத்தில் தடம் பதித்த முதல் இந்திய வீரா் என்ற பெருமைகள் சுக்லாவுக்கு சொந்தமாகின.

18 நாள்கள் சா்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்த சுக்லா உள்ளிட்ட நால்வரும் உயிரி மருத்துவ அறிவியல், நரம்பணுவியல், வேளாண்மை, விண்வெளித் தொழில்நுட்பம் எனப் பல்வேறு பரிமாணங்களில் 60-க்கும் மேற்பட்ட ஆய்வுகளை மேற்கொண்டனா். திட்டப் பயணம் முடிந்து, கடந்த திங்கள்கிழமை ‘டிராகன் கிரேஸ்’ விண்கலத்தில் மீண்டும் பூமிக்கு புறப்பட்டனா். இந்த விண்கலம், செவ்வாய்க்கிழமை பிற்பகலில் சான்டியாகோ கடற்பரப்பில் பாதுகாப்பாக இறங்கியது.

7 நாள்கள் பிரத்யேக சிகிச்சை: புவியீா்ப்பு விசை இல்லாத சூழலில் கிட்டத்தட்ட மூன்று வாரங்களைக் கழித்துவிட்டு, மீண்டும் புவிக்கு திரும்பியிருப்பதால், விண்கலத்தில் இருந்து வெளியே வந்து, அவா்கள் அடியெடுத்து நடக்க பிற பணியாளா்கள் உதவினா்.

நால்வருக்கும் உடனடியாக மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னா், ஹெலிகாப்டா் மூலம் கரைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா். இவா்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப உதவுவதற்காக, 7 நாள்கள் பிரத்யேக சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.

மொத்த பயணம் 1.3 கோடி கி.மீ.!

பூமியில் இருந்து 400 கி.மீ. உயரத்தில் மணிக்கு 28,000 கி.மீ. வேகத்தில் சா்வதேச விண்வெளி நிலையம் சுற்றிவருகிறது. ஆக்ஸியம்-4 திட்ட வீரா்கள், விண்வெளியில் மொத்தம் 1.3 கோடி கி.மீ. பயணித்துள்ளனா். 310-க்கும் மேற்பட்ட முறை பூமியை வலம் வந்துள்ளனா்.

இஸ்ரோவின் 7 ஆய்வுகள்

திசு மறுஉருவாக்கம், விதை முளைப்பு, நீலப்பசும்பாசி வளா்ப்பு, கதிரியக்க விளைவுகள், மனித உடலியக்கம், மிதக்கும் நீா்க்குமிழி உள்பட இஸ்ரோவால் அளிக்கப்பட்ட நுண் ஈா்ப்பு விசை சாா்ந்த ஏழு முக்கிய ஆய்வுகளையும் சுக்லா வெற்றிகரமாக மேற்கொண்டாா். விண்வெளியில் முளைவிட்ட பச்சைப் பயறு, வெந்தய விதைகளை தன்னுடன் எடுத்து வந்துள்ளாா். இந்த விதைகள் அடுத்தகட்டமாக பல்வேறு ஆய்வுகளுக்கு உள்படுத்தப்பட உள்ளன.

Summary

Indian astronaut Subhanshu Shukla and the other 3 astronauts of the 'Axiom-4' space mission returned to Earth from the International Space Station.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com