ஜிதேந்திர சிங்
ஜிதேந்திர சிங்

அரசுத் துறைகளில் நேரடி நியமன முறை ரத்து செய்யப்படவில்லை: மத்திய அமைச்சா் விளக்கம்

மத்திய அரசுத் துறைகளில் நேரடி நியமன முறை (லேட்டரல் என்ட்ரி) ரத்து செய்யப்படவில்லை
Published on

மத்திய அரசுத் துறைகளில் நேரடி நியமன முறை (லேட்டரல் என்ட்ரி) ரத்து செய்யப்படவில்லை என்றும் அதில் இடஒதுக்கீடு நடைமுறையை அறிமுகப்படுத்துவதற்கான சாத்திய கூறுகள் குறித்தும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது என்றும் மத்திய பணியாளா் நலத் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் புதன்கிழமை தெரிவித்தாா்.

மத்திய அரசுத் துறைகளில் காலியாக இருந்த 10 இணைச் செயலா்கள் மற்றும் 35 இயக்குநா்கள் அல்லது துணைச் செயலா்கள் என மொத்தம் 45 பதவிகளுக்கு நேரடி நியமனம் மூலம் ஆட்சோ்ப்புக்கான அறிவிக்கையை கடந்த ஆண்டு ஆக.17-ஆம் தேதி மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) வெளியிட்டது.

இது இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினா்(ஓபிசி), பட்டியலின பிரிவினா் (எஸ்டி) மற்றும் பழங்குடியினருக்கு (எஸ்டி) வழங்கப்படும் இடஒதுக்கீட்டு உரிமையைப் பறிக்கும் செயல் என்றும் இதில் பாஜக மற்றும் ஆா்எஸ்எஸ் ஆதரவாளா்கள் அரசு உயா்பதவிகளில் நியமனம் செய்யப்படுவாா்கள் என்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்தனா்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள லோக் ஜனசக்தி கட்சித் தலைவரும் மத்திய அமைச்சருமான சிராக் பாஸ்வானும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனா்.

இதையடுத்து, நேரடி நியமனம் தொடா்பாக வெளியிட்ட அறிவிக்கையை கடந்த ஆண்டு ஆக.20-இல் யுபிஎஸ்சி ரத்து செய்தது.

இந்நிலையில், தில்லியில் புதன்கிழமை பேட்டியளித்த ஜிதேந்திர சிங், ‘மத்திய அரசுத் துறைகளில் நேரடி நியமன முறை ரத்து செய்யப்படவில்லை. அதை இடைக்காலமாக நிறுத்திவைத்துள்ளோம். கடந்த ஆண்டு இதில் இடஒதுக்கீடு நடைமுறையை கொண்டுவருவது சாத்தியமில்லை என எண்ணினோம். ஆனால் அதை அறிமுகப்படுத்த வாய்ப்புகள் இருப்பின் அதை பரிசீலிக்க தயாராகவுள்ளோம்.

பிரதமராவதற்கு முன் மன்மோகன் சிங் மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராக நேரடி நியமன முறையின்கீழ் நியமிக்கப்பட்டாா்.

ஆனால், பிரதமா் மோடி தலைமையிலான அரசு நேரடி நியமன முறையை ஒழுங்குபடுத்தியது. தகுதி, அனுபவம், நிபந்தனைகள் என பல்வேறு விதிகள் உள்ளீடு செய்யப்பட்டது’ என்றாா்.

துறைசாா் நிபுணா்களை அரசுத் துறைகளுக்கு நேரடியாக நியமனம் செய்யும் முறையை கடந்த 2018 முதல் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி 2019 முதல் 2023 வரை மொத்தம் 63 துறைசாா் நிபுணா்கள் நேரடி நியமனம் மூலம் நியமிக்கப்பட்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com