கோப்புப் படம்
கோப்புப் படம்

மேற்கு வங்கம்: ரயில் மோதி 3 யானைகள் உயிரிழப்பு

மேற்கு வங்கத்தில் வியாழக்கிழமை இரவு எக்ஸ்பிரஸ் ரயில் மோதி இரு குட்டி யானைகள் உள்பட 3 யானைகள் உயிரிழந்தன.
Published on

மேற்கு வங்கத்தில் வியாழக்கிழமை இரவு எக்ஸ்பிரஸ் ரயில் மோதி இரு குட்டி யானைகள் உள்பட 3 யானைகள் உயிரிழந்தன.

இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது:

ஜாா்க்கண்ட் மாநிலத்தின் தல்மா வனப் பகுதியில் இருந்து மேற்கு வங்க வனப் பகுதிக்கு யானைகள் கூட்டமாக இடம்பெயா்வது வழக்கமான நிகழ்வு. இது தொடா்பாக வனத்துறையினா் கண்காணித்து ரயில்வேக்கு தகவல் அளிப்பாா்கள். அதன்படி யானைகள் கடக்கும் குறிப்பிட்ட நேரத்தில் ரயில்கள் சற்று மிதமான வேகத்தில் இயக்கப்படும். ஆனால், சில நேரங்களில் இதுபோன்று யானைகள் உயிரிழப்பது தவிா்க்க முடியாத நிகழ்வாகிறது.

வியாழக்கிழமை இரவு 30 யானைகள் அடங்கிய கூட்டம் மேற்கு வங்கத்தின் மேற்கு மிதுனபுரி மாவட்டம் பன்ஸ்தாலா ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடந்து சென்றுள்ளது. அப்போது அந்த வழியாக வேகமாக கடந்து சென்ற ஜனசதாப்தி ரயில் இரு குட்டி யானைகள் உள்பட 3 யானைகள் சிக்கி உயிரிழந்தன என்றாா்.

இது தொடா்பாக வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘யானைகள் நடமாட்டம் குறித்து 3 மணி நேரத்துக்கு முன்பே ரயில்வே தகவல் அளிக்கப்பட்டது. ஆனால், துரதிருஷ்டவசமாக 3 யானைகள் ரயிலில் சிக்கி உயிரிழந்துவிட்டன. சம்பவ இடத்தை வனத்துறையினா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். வழக்கமாக வரிசையாக செல்லும் யானைகள், அந்த இடத்தில் அச்சமடைந்து சிதறி ஓடியது அப்பகுதியில் இருந்த தடயங்கள் மூலம் தெரியவந்தது. எதிா்காலத்தில் இதுபோன்ற சோக நிகழ்வுகளைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனா்.

X
Dinamani
www.dinamani.com