
மும்பை: 2006ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி மும்பை ரயில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட 12 பேரையும் மும்பை உயர்நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது; அரசுத் தரப்பு குற்றத்தை நிரூபிப்பதில் 'முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது' என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குற்றவாளிகளில் ஐந்து பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையையும், மீதமுள்ள ஏழு பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையையும் உறுதி செய்ய மறுத்துவிட்ட மும்பை உயர் நீதிமன்றம், அவர்களை விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.
மும்பை நகரின் மேற்கு ரயில்வே மண்டலத்தில் பயணிகள் ரயிலில் நடந்த இந்த குண்டுவெடிப்புச் சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு 19 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளிகள் அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 180 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
நீதிபதிகள் அனில் கிலோர் மற்றும் ஷியாம் சந்தக் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு, அரசு தரப்பு நீதிமன்றத்தில் அளித்திருக்கும் சாட்சியங்கள் மட்டுமே, குற்றம் சாட்டப்பட்டவர்களை குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்க போதுமானவை அல்ல என்றும் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான வழக்கை நிரூபிக்க அரசு தரப்பு முற்றிலும் தவறிவிட்டது. குற்றம் சாட்டப்பட்டவர் குற்றம் செய்தார்கள் என்பதை நம்புவதே கடினமாக உள்ளது. எனவே அவர்களின் தண்டனை ரத்து செய்யப்படுகிறது என்று உயர்நீதிமன்றம் கூறியிருக்கிறது.
குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை இந்த அமர்வானது நாள்தோறும் விசாரணை நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
என்ன வழக்கு?
மும்பை புறநகர் ரயில் சேவையில், கடந்த 2006ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் தேதி, மேற்கு வழித்தடத்தில் பல்வேறு ரயில்களில் ஏழு குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டன. அதில் 180 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த விசாரணை நீதிமன்றம் கடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்தது. அதில் 5 பேருக்கு மரண தண்டனையும் ஏழு பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்தது.
இந்த தீர்ப்பையடுத்து, மகாராஷ்டிர அரசு, மரண தண்டனையை உறுதி செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. தண்டனையை எதிர்த்து குற்றவாளிகளும் மேல்முறையீடு செய்திருந்தனர்.
இந்த வழக்குகள் நாள்தோறும் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று காலை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் 12 பேரும் விடியோ கான்பரன்சிங் மூலம், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.
2006 மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் 12 பேர் மீதான தண்டனையை மும்பை உயர் நீதிமன்றம் திங்கள்கிழமை ரத்து செய்து, அவர்களை விடுவித்துள்ளதோடு, அவர்களுக்கு எதிரான வழக்கை நிரூபிக்க அரசு தரப்பு "முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது" என்றும் குறிப்பிட்டிருக்கிறது.
தீர்ப்பைக் கேட்ட குற்றவாளிகள், தங்களது வழக்குரைஞர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
சம்பவத்தன்று..
கடந்த 2006ஆம் ஆண்டு 8 நிமிட இடைவெளியில் 7 மின்சார ரயில்களில் பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்புத் தாக்குதலில் 180 பேர் பலியகினர். 829 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்று கருதப்பட்ட சிமி இயக்கத்தைச் சேர்ந்த 13 பேர் கைது செய்யப்பட்டனர். 9 ஆண்டுகள் இந்த இந்த வழக்கின் முடிவுல், 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 12 பேர் குற்றவாளிகள் என்றும், ஒருவரை விடுதலை செய்தும் மும்பை விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
மேலும், ஐந்து குற்றவாளிகளுக்கு மரண தண்டனையும், 7 பேருக்க ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.