
ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள வைஷ்ணவி தேவி கோயிலுக்குச் செல்லும் பழைய பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டதில் 5 பக்தர்கள் உள்பட 10 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
திரிகுடா மலைகளில் உள்ள சன்னதிக்கு வருகைதரும் பக்தர்களுக்கான அடிப்படை முகாமான கத்ரா நகரத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் முன்பதிவு அலுவலகம் மற்றும் மேல்நிலை இரும்பு அமைப்பு இடிந்து விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வைஷ்ணவி தேவி கோயிலுக்குச் செல்ல பிற்பகல் 1 மணி பக்தர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் பங்கங்கா அருகே உள்ள குல்ஷன் கா லங்காரில் காலை 8.30 மணியளவில் நடந்தது. பக்தர்கள் நகரத்திலிருந்து 12 கி.மீ தொலைவில் உள்ள குகைக் கோயிலுக்கு அழைத்துச் செல்வதற்கு முன்பு பெரும்பாலும் குதிரை சவாரி செய்பவர்கள் பழைய பாதையில் ஒன்றுகூடிப் பதிவு செய்கிறார்கள்.
நிலச்சரிவில் மூன்று பேர் படுகாயமடைந்தனர், மேலும் ஏழு பேர் லேசான காயமும் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர் என்று மாதா வைஷ்ணவி தேவி ஆலய வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சச்சின் குமார் வைஷ்யா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஜம்மு மாவட்ட நீதிபதி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முழு அளவிலான மீட்பு மற்றும் இடிபாடுகளை அகற்றும் பணி நடைபெற்று வருவதாகக் கூறினார்.
உள்ளூர் தன்னார்வலர்கள், ஆலய வாரிய ஊழியர்கள், எஸ்டிஆர்எஃப், காவல்துறை மற்றும் சிஆர்பிஎஃப் பணியாளர்கள் உடனடியாக மீட்பு நடவடிக்கையைத் தொடங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னையைச் சேர்ந்த உப்பன் (70), அவரது மனைவி கே. ராதா (66), ஹரியாணாவைச் சேர்ந்த ராஜிந்தர் பல்லா (70) ஆகியோர் நாராயண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர், அதே நேரத்தில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த லீலா ராய்க்வர் (56) கட்ரா சமூக சுகாதார மையத்தில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வானிலை ஆய்வுத் துறையின் கூற்றுப்படி, இன்று காலை 8.30 நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் கத்ரா நகரில் 184.2 மிமீ மழை பதிவாகியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை இரவு ஹிம்கோட்டி அருகே மற்றொரு நிலச்சரிவு ஏற்பட்டதால் புதிய பாதை தடைப்பட்டுள்ளது, அதைச் சரிசெய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.