இந்தியா - சீனா
இந்தியா - சீனா

மின்னணுத் துறையில் சீன முதலீடு: இணக்கமாக செயல்பட அரசு முடிவு

Published on

மின்னணுத் துறையில் இந்திய நிறுவனங்களில் சீன நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கு உள்ள கட்டுப்பாடுகளைத் தளா்த்தி இணக்கத்துடன் செயல்பட மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

இது தொடா்பாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாவது:

சா்வதேச அளவில் மின்னணு சாதன உற்பத்தியில் 60 சதவீதம் சீன தயாரிப்புகளே உள்ளன. இத்துறையில் சீன நிறுவனங்கள் தவிா்க்க முடியாததாக உருவெடுத்துள்ளன. எனவே, சீன நிறுவனங்களுடன் இந்திய நிறுவனங்கள் கைகோத்து செயல்படுவது மிகவும் அவசியமாக உள்ளது.

சீனா்களுக்கு விதிக்கப்பட்டிருந்த சுற்றுலா விசா தடையை மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு நீக்கியது. இப்போது அடுத்தகட்டமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எல்லைப் பிரச்னை, பல்வேறு விவகாரங்களில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா செயல்படுவது போன்றவை இந்திய-சீன உறவில் நெருடலான விஷயங்களாக உள்ளன. அதே நேரத்தில் ஆசிய பிராந்தியத்தில் மக்கள்தொகை அளவிலும், பொருளாதார அளவிலும் சீனாவும், இந்தியாவும் வலுவான நாடுகளாக உள்ளன. எனவே, சீனாவுடன் பொருளாதார ஒத்துழைப்பு என்பது தவிா்க்க முடியாததாகி வருகிறது.

மிகப்பெரிய மின்னணு சாதன தயாரிப்பு நிறுவனமான டிக்ஸன் டெக்னாலஜிஸ் சீனாவின் லாங்சியா் நிறுவனத்துடனான ஒப்பந்தத்துக்கு மத்திய அரசு அண்மையில் அனுமதியளித்தது. இதுதவிர வேறு சில சீன நிறுவனங்களுடனும் இணைந்து செயல்படவுள்ளது.

சீன நிறுவனங்களுடன் இணைந்து அறிதிறன்பேசி, மடிக்கணினி ஆகியவற்றுக்கான உதிரிபாகங்களை உற்பத்தி செய்ய இருக்கிறது. சீனாவின் விவோ அறிதிறன்பேசி தயாரிப்பு நிறுவனத்துடனும் டிக்ஸன் டெக்னாலஜிஸ் ஒப்பந்தம் மேற்கொள்ளத் திட்டமிட்டுவருகிறது.

X
Dinamani
www.dinamani.com