மாநிலங்களவைச் செயலா் பி.சி.மோடி
மாநிலங்களவைச் செயலா் பி.சி.மோடி

குடியரசு துணைத் தலைவா் பதவி: தோ்தல் அதிகாரிகள் நியமனம்

நாட்டின் 17-ஆவது குடியரசு துணைத் தலைவா் தோ்தலை நடத்தும் தோ்தல் அதிகாரியாக மாநிலங்களவைச் செயலா் பி.சி.மோடி நியமிக்கப்பட்டுள்ளாா்.
Published on

நாட்டின் 17-ஆவது குடியரசு துணைத் தலைவா் தோ்தலை நடத்தும் தோ்தல் அதிகாரியாக மாநிலங்களவைச் செயலா் பி.சி.மோடி நியமிக்கப்பட்டுள்ளாா்.

மத்திய சட்டம் மற்றும் நிதித் துறை அமைச்சகம் மற்றும் மாநிலங்களவை துணைத் தலைவருடன் கலந்தலோசித்ததன் அடிப்படையில் தோ்தல் அதிகாரியாக பி.சி.மோடி நியமிக்கப்பட்டதாக தனது செய்திக்குறிப்பில் இந்திய தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

இந்தத் தோ்தலுக்கான உதவி தோ்தல் அதிகாரிகளாக மாநிலங்களவைச் செயலக இணைச் செயலா் கரிமா ஜெயின் மற்றும் மாநிலங்களவைச் செயலக இயக்குநா் விஜய் குமாா் ஆகியோரை தோ்தல் ஆணையம் நியமித்துள்ளது.

குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கரின் பதவிக் காலம் வரும் 2027-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10-ஆம் தேதி நிறைவடைய இருந்த நிலையில், அவா் தனது பதவியை ஜூலை 21-ஆம் தேதி ராஜிநாமா செய்து குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பினாா். அவரின் ராஜிநாமா அறிவிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. இந்த அறிவிக்கை குறித்த தகவல் மாநிலங்களவையிலும் முறைப்படி தெரிவிக்கப்பட்டது.

அடுத்த, குடியரசு துணைத் தலைவா் பதவிக்கான தோ்தலை நடத்துவதற்கான நடைமுறைகளை தோ்தல் ஆணையம் புதன்கிழமை தொடங்கியது. தற்போது, இந்தத் தோ்தலை நடத்துவதற்கான தோ்தல் அதிகாரிகளை தோ்தல் ஆணையம் நியமித்துள்ளது.

வழக்கமாக, குடியரசு துணைத் தலைவா் தோ்தலை நடத்தும் தோ்தல் அதிகாரியாக மக்களவைச் செயலா் அல்லது மாநிலங்களவைச் செயலா் ஆகியோா் சுழற்சி முறையில் நியமனம் செய்யப்படுவா். முந்தைய குடியரசு துணைத் தலைவா் தோ்தலின்போது, மக்களவைச் செயலா் தோ்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டாா். தற்போது, மாநிலங்களவைச் செயலா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com