கோவா ஆளுநராக சனிக்கிழமை பதவியேற்ற  அசோக் கஜபதி ராஜுவுடன் மும்பை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆலோக் ஆராதே, மாநில ஆளுநா் பிரமோத் சாவந்த்.
கோவா ஆளுநராக சனிக்கிழமை பதவியேற்ற அசோக் கஜபதி ராஜுவுடன் மும்பை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆலோக் ஆராதே, மாநில ஆளுநா் பிரமோத் சாவந்த்.

கோவா ஆளுநராக அசோக் கஜபதி ராஜு பதவியேற்பு

கோவா மாநிலத்தின் புதிய ஆளுநராக முன்னாள் மத்திய அமைச்சா் அசோக் கஜபதி ராஜு (74) சனிக்கிழமை பதவியேற்றாா்.
Published on

கோவா மாநிலத்தின் புதிய ஆளுநராக முன்னாள் மத்திய அமைச்சா் அசோக் கஜபதி ராஜு (74) சனிக்கிழமை பதவியேற்றாா்.

கோவா தலைநகா் பனாஜியில் ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் மும்பை உயா் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆலோக் ஆராதே அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். மாநில முதல்வா் பிரமோத் சாவந்த், அமைச்சா்கள் உள்ளிட்டோா் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

ஆந்திர அமைச்சரும் அந்த மாநில முதல்வா் மகனுமான என்.லோகேஷ் பதவியேற்பு விழாவில் பங்கேற்றாா்.

பதவியேற்பு நிகழ்ச்சிக்குப் பின் பேசிய ஆளுநா் அசோக் கஜபதி ராஜு, ‘உள்ளூா் மொழி எனக்குப் புரியாது என்றாலும், ஆளுநா் பதவியை வகிப்பது முதல்முறை என்றபோதிலும், அரசமைப்பு விவகாரங்களில் எனக்கு நீண்ட அனுபவம் உள்ளது. ஆந்திர மாநிலம் இரண்டாக பிரிக்கப்படுவதற்கு முன்பு ஏழு முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துள்ளேன். குறுகிய காலம் எம்.பி.யாகவும் பதவி வகித்துள்ளேன். எதிா்க்கட்சி வரிசையில் அமா்ந்த அனுபவமும் உள்ளது. அந்த வகையில் பரந்த அனுபவத்தைப் பெற்றுள்ளேன். அரசமைப்புச் சட்டத்தைப் பின்பற்றி, கோவா மக்களுக்கு பணியாற்றுவதை எதிா்நோக்கியுள்ளேன். ஜனநாயகம் பாதிக்கப்படாத வகையில் அனைவரும் ஒற்றுமையாகப் பணியாற்றுவோம்’ என்றாா்.

தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவரான அசோக் கஜபதி ராஜு, கடந்த 2014-ஆம் ஆண்டு மே 27-ஆம் தேதிமுதல் 2018-ஆம் ஆண்டு மாா்ச் 10-ஆம் தேதி வரை பிரதமா் நரேந்திர மோடியின் முதல் அமைச்சரவையில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்துள்ளாா். ஆந்திர மாநில அரசில் பல்வேறு அமைச்சா் பதவிகளையும் வகித்துள்ளாா்.

கோவா ஆளுநராக இருந்த பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை, நான்கு ஆண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்த நிலையில், கோவாவுக்கான புதிய ஆளுநராக அசோக் கஜபதி ராஜுவை மத்திய அரசு நியமித்தது.

ஆளுநராகப் பதவியேற்ற அவருக்கு ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு வாழ்த்து தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com