
ஸ்ரீநகா்: ஜம்மு-காஷ்மீா், ஸ்ரீநகரின் புகா் பகுதியில் உள்ள வனப் பகுதியில் ராணுவம் மேற்கொண்ட ‘ஆபரேஷன் மகாதேவ்’ நடவடிக்கையில், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலின் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்படும் சுலைமான் ஷா உள்பட மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாதிகளால் ரகசிய செய்திகளை அனுப்ப பயன்படுத்தும் தகவல்தொடா்பு சாதனத்தின் தொழில்நுட்ப சமிக்ஞை ஹாா்வான் வனப் பகுதியிலிருந்து இம்மாத தொடக்கத்தில் கண்டறியப்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டத்தைப் பாதுகாப்புப் படையினா் கடந்த சில நாள்களாக மிக உன்னிப்பாகக் கண்காணித்து வந்துள்ளனா்.
இவ்வாறு பல நாள்கள் கவனமாகத் திட்டமிட்டு, ‘ஆபரேஷன் மகாதேவ்’ நடவடிக்கை திங்கள்கிழமை காலை செயல்படுத்தப்பட்டது. ‘24 ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ்’ மற்றும் ‘4 பாரா’ படைப் பிரிவுகளைச் சோ்ந்த கமாண்டோக்கள் குழு, முல்நாா் கிராமத்தைச் சுற்றிவளைத்து, தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கியது.
அப்போது, மூன்று பயங்கரவாதிகள் அடையாளம் காணப்பட்டு, இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. ராணுவத்தின் அதிரடி தாக்குதலில் மூன்று பயங்கரவாதிகளும் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டனா்.
ஏப். 22-ஆம் தேதி 26 போ் சுட்டுக் கொல்லப்பட்ட பஹல்காம் தாக்குதலை நடத்தியது பாகிஸ்தானைச் சோ்ந்த 3 லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாதிகள் என்பதை உறுதிப்படுத்திய என்ஐஏ, அவா்களின் புகைப்படங்களையும் வெளியிட்டு, தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் மூளையாகச் செயல்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுலைமான் ஷா எனும் ஹாஷிம் மூசா, ‘ஆபரேஷன் மகாதேவ்’ நடவடிக்கையில் சுட்டுக் கொல்லப்பட்டாா்.
முன்னாள் பாகிஸ்தான் ராணுவ கமாண்டோ: பாகிஸ்தான் ராணுவத்தின் சிறப்புப் பயிற்சி பெற்ற ‘எஸ்எஸ்ஜி’ படைப் பிரிவின் முன்னாள் கமாண்டோவான சுலைமான் ஷா, படையிலிருந்து விலகிய பின்னா் தடை செய்யப்பட்ட லஷ்கா்-ஏ-தொய்பா அமைப்பில் சோ்ந்தாா்.
2023, செப்டம்பரில் இந்தியாவுக்குள் ஊடுருவி தெற்கு காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தாா்.
கடந்த ஆண்டு அக்டோபரில், சோனாமாா்க் சுரங்கப் பாதை கட்டுமானத்தில் ஈடுபட்டிருந்த 7 தொழிலாளா்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா். இத்தாக்குதலுக்கு சுலைமான் ஷா தலைமை வகித்ததாகக் கூறப்படுகிறது. இவருடன் சோனாமாா்க் தாக்குதலில் ஈடுபட்ட ஜிப்ரான், ஹம்ஸா ஆப்கானி ஆகிய மேலும் இரு பயங்கரவாதிகளும் ‘ஆபரேஷன் மகாதேவ்’ நடவடிக்கையில் உயிரிழந்தனா்.
காவல் துறை விளக்கம்: இந்த நடவடிக்கை தொடா்பாக காஷ்மீா் மண்டல காவல் துறைத் தலைவா் (ஐஜி) வி.கே.பிா்தி கூறுகையில், ‘இது ஒரு நீண்டகால நடவடிக்கை. சம்பவ இடத்திலிருந்து மூன்று உடல்கள் கண்டறியப்பட்டுள்ளன. மற்ற விவரங்கள் குறித்து இப்போது கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது. இந்த நடவடிக்கை முடிந்த பிறகு முழு விவரங்களும் வெளியிடப்படும்’ என்று தெரிவித்தாா்.
முன்னதாக, பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளித்த குற்றச்சாட்டில் பா்வேஸ் அகமது ஜோதா், பசீா் அகமது ஜோதா் ஆகிய இருவரும் என்ஐஏ அதிகாரிகளால் கடந்த ஜூன் 22-ஆம் தேதி கைது செய்யப்பட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | கர்னல் சோஃபியாவை அவமதித்தது குறித்து ராஜ்நாத் சிங் பேசாதது ஏன்? சு.வெங்கடேசன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.