இலக்கை எட்டியதால் போர் நிறுத்தம்; அழுத்தத்தால் அல்ல! ராஜ்நாத் சிங்

ஆபரேஷன் சிந்தூர் குறித்து மக்களவையில் ராஜ்நாத் சிங் விளக்கம்...
மக்களவையில் ராஜ்நாத் சிங்
மக்களவையில் ராஜ்நாத் சிங் SANSAD
Published on
Updated on
2 min read

இந்திய ராணுவம் தனது இலக்கை முழுமையாக எட்டியதால்தான் தாக்குதலை நிறுத்தினோம் என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் தெரிவித்தார்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை தொடா்பாக, மக்களவையில் திங்கள்கிழமையும் (ஜூலை 28), மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமையும் (ஜூலை 29) தலா 16 மணிநேர சிறப்பு விவாதம் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்த நிலையில், மத்திய அரசு தரப்பில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் விளக்கம் அளித்து விவாதத்தை தொடங்கிவைத்தார்.

அவர் பேசியதாவது:

”நாட்டின் இறையாண்மையை பாதுகாக்கவும் பயங்கரவாதத்துக்கு எதிராகவும் மே 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது.

ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காமில் கோழைத்தனமான, மனிதத்தனமற்ற கொடூரமற்ற தாக்குதல் நடத்தப்பட்டது. அப்பாவி மக்கள் மதத்தின் பெயரில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கு பிறகு, முப்படைகளின் தளபதிகளுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பிறகு துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களை துல்லியமாக குறிவைத்து தாக்கினர். பாகிஸ்தான் குடிமக்கள் பாதிக்கக்கூடாது என்பதில் கவனமாக இருந்தனர்.

இந்த தாக்குதல் மூலம் குறைந்தபட்சம் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மே 7 நள்ளிரவு 1.05 மணிக்கு ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டது. பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு பாகிஸ்தான் காஷ்மீர் பகுதியில் 9 இலக்குகளை குறிவைத்து பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்தியாவின் நவீன ஆயுதங்கள் மூலம் 7 முகாம்களை இந்திய விமானப் படை முற்றிலுமாக தாக்கி அழித்தது. 22 நிமிடங்களில் மொத்த தாக்குதலும் நடத்தப்பட்டது. அவர்களின் மறைவிடங்களிலேயே அவர்களை அழித்துள்ளோம்.

இலங்கையை அழிக்க ராமர் வகுத்த உத்திகளை நாமும் வகுத்து இந்த தாக்குதலை நடத்தியுள்ளோம். நமது ராணுவம் மீதும் பொதுமக்கள் மீதும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. பின்னர், நமது பதில் தாக்குதலால் போர் நிறுத்தம் வேண்டும் என்று பாகிஸ்தான் கோரியது.

நமது விமானப் படை தளங்களை தாக்க முயற்சித்தனர். ஆனால், ஆகாஷ் ஏவுகணை, எஸ்400 வான் பாதுகாப்பு ஆயுதங்கள் மூலம் தாக்குதல் முறியடிக்கப்பட்டது. தொடர்ந்து, மே 8 ஆம் தேதி அவர்களின் விமானப் படை தளங்களை இலக்காக வைத்து ஆளில்லா ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. மே 10 வரை பாகிஸ்தானும் தாக்குதல் நடத்தியது. மின்னணு போரையும் நடத்தினார்கள். நமது பகுதியை இலக்காக நிர்ணயித்து அவர்கள் நடத்திய தாக்குதல் அனைத்தும் முறியடிக்கப்பட்டது. நமது முக்கிய இடங்கள் எதுவும் தாக்கப்படவில்லை. ஆனால், நமது ராணுவம் 100 சதவிகித வெற்றியை எட்டியது.

ஆபரேஷன் சிந்தூர் முப்படைகளின் ஒற்றுமைக்கான வெற்றியாக உள்ளது. நமது நோக்கம் பயங்கரவாதிகளை அழிப்பது மட்டுமே. நமது இலக்கை எட்டியதால் தாக்குதலை நிறுத்தினோம், யாருடைய அழுத்தத்தாலும் நிறுத்தப்படவில்லை.

முப்படைகளுக்கும் முழு அதிகாரம் கொடுக்கப்பட்டது. இலக்குகளை அவர்களே தேர்வு செய்தனர். இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் மறைமுக நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. போருக்கான எந்த நோக்கமும் கிடையாது.

பாகிஸ்தானின் பல்வேறு விமானத் தளங்கள் அழிக்கப்பட்டுள்ளதால், இது பாகிஸ்தானுக்கான தோல்வியாகும். பாகிஸ்தான் கோரியதால் தாக்குதல் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. முழுமையாக நிறுத்தப்படவில்லை.

எதிர்க்கட்சியினர் எத்தனை விமானங்கள் வீழ்த்தப்பட்டன என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். இது ஆரோக்கியமான கேள்வி அல்ல. ஒருமுறைகூட எதிரி விமானங்கள் எத்தனை வீழ்த்தப்பட்டன என்று கேட்கவில்லை.

ஆபரேஷன் சிந்தூரில் இந்திய ராணுவத்தினர் யாரும் உயிரிழக்கவில்லை. ஒரு இலக்கை நோக்கி செல்லும்போது சிறுசிறு விஷயங்களை பெரிதாக்கக் கூடாது.

உதாரணமாக, தேர்வில் மாணவர் மதிப்பெண் பெறுவதுதான் முக்கியம், தேர்வில் மாணவர் பேனாவை தொலைத்து விட்டாரா போன்ற கேள்விகளை தவிர்க்க வேண்டும். முடிவுதான் முக்கியம், ஆபரேஷன் சிந்தூரை பொறுத்தவரை நிர்ணயிக்கப்பட்ட இலக்குகள் முற்றிலும் அழிக்கப்பட்டன.

அமைதியை நிலைநாட்டுவதற்காகதான் துல்லிய தாக்குதல்களை இந்த அரசு நடத்தியது. பயங்கரவாதமும் அமைதியும் ஒன்றாக பயணிக்க முடியாது. பேச்சுவார்த்தை என்பது ஜனநாயக நாடுகளுக்கு இடையேதான் நடத்த முடியும். இந்தியாவுக்கு எதிரான மதம் சார்ந்த வெறுப்புணர்வுடன் இருப்பவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது.

பாகிஸ்தான் தற்போது உள்நாட்டிலேயே பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றது. உலகளவில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடாக பாகிஸ்தான் உள்ளது. இது அவர்களின் கொள்கை.

பாகிஸ்தான் பலவீனமானது, நமது முன்பு நிற்க முடியாது. பயங்கரவாதத்தை அவர்களின் மொழியிலேயே பதிலடி கொடுக்க நமக்கு தெரியும்” எனத் தெரிவித்தார்.

ராஜ்நாத் சிங் பேசும்போது, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் அவையில் இருந்தனர்.

Summary

Union Defense Minister Rajnath Singh told the Lok Sabha that the attack was called off only because the Indian Army had fully achieved its objective.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com