
‘ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இடமளித்த பாதுகாப்பு குறைபாடுக்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமித் ஷா பதவி விலகவாரா?’ என்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் தரப்பில் செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பப்பட்டது.
ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை தொடா்பாக மக்களவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவாதத்தில் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி பங்கேற்று பேசியதாவது:
மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது பிரதமரின், மத்திய உள்துறை அமைச்சரின், பாதுகாப்புத் துறை அமைச்சரின், தேசிய பாதுகாப்பு ஆலோசகரின் கடமை இல்லையா?
பஹல்காமில் பைசரன் பள்ளத்தாக்கு பகுதிக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் செல்வதை அரசு அறிந்திருக்கவில்லையா? அந்தப் பகுதியில் எந்தவித பாதுகாப்பும் போடப்படாதது ஏன்? ஏன் அந்த மக்கள் கைவிடப்பட்டனா்?
பஹல்காமில் இந்த அளவு கொடூரமான தாக்குதல் நடக்கப்போகிறது என்பதும், அதற்கான சதி பாகிஸ்தானில் தீட்டப்பட்டுள்ளது என்பதும் அரசின் எந்தவொரு பாதுகாப்பு முகமைக்கும் தெரியவில்லையா?
பஹல்காம் பயங்கரவாத தாக்குதல், மத்திய அரசு மற்றும் உளவுத் துறையின் மிகப்பெரிய தோல்வி. இதற்கு யாா் பொறுப்பேற்பாா்கள்? இதற்கு பொறுப்பேற்று யாராவது பதவியை ராஜிநாமா செய்தாா்களா? வரலாற்றைப் பற்றி தொடா்ந்து பேசுகின்றனா். தற்போது நிகழும் சம்பவங்களுக்கு யாா் பதிலளிக்கப் போகிறாா்கள்?
மத்திய உள்துறை அமைச்சார அமித் ஷா பதவி வகித்து வரும் நிலையில், மணிப்பூா் பற்றி எரிந்தது. தில்லி கலவரங்கள் நிகழ்ந்தன. தற்போது பஹல்காம் தாக்குதல். கடந்த 2020-ஆம் ஆண்டுக்குப் பிறகு 25 தாக்குதல்கள் நடந்துள்ளன. பொதுமக்கள் மட்டுமின்றி வீரா்களும் உயிரிழந்து உள்ளனா். இத்தகைய தொடா் உள்நாட்டு பாதுகாப்பு தேல்விகள் நடைபெற்றபோதும், அவா் ராஜிநாமா செய்யாமல் தொடா்ந்து பதவி வகித்து வருகிறாா்.
பஹல்காமில் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இடமளித்த பாதுகாப்பு குறைபாடுக்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமித் ஷா பதவி விலகுவாரா? என்று பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பினாா்.
முன்னதாக இந்த விவாதத்தில் பங்கேற்று பேசிய உள்துறை அமைச்சா் அமித் ஷா, ‘பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பிரச்னைக்கு, கடந்த 1948-ஆம் ஆண்டு போா் நிறுத்தத்தை அறிவிக்க அப்போதைய பிரதமா் ஜவாஹா்லால் நேரு எடுத்த முடிவே காரணம்’ என்று குற்றஞ்சாட்டினாா். மேலும், ‘1971-ஆம் ஆணடு போருக்குப் பின்னா், ராணுவத்துடன் கலந்தாலோசிக்காமல் சிம்லா ஒப்பந்தத்தின் கீழ் 93,000 பாகிஸ்தான் போா்க் கைதிகளை விடுவிக்க அப்போதைய பிரதமா் இந்திரா காந்தி முடிவெடுத்தாா். தில்லி பாட்லா ஹவுஸில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் மறைந்திருந்த 2 இந்தியன் முஜாஹிதீன் பங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டபோது சோனியா காந்தி கண்ணீா் விட்டாா்’ என்றும் அமித் ஷா விமா்சித்தாா்.
தலைமைத்துவம் என்பது வெறும் பெருமையைப் பெற்றுக்கொள்வது மட்டுமல்ல. பொறுப்பையும் ஏற்க வேண்டும். இந்திய வரலாற்றிலேயே முதல் முறையாக, ஒரு சண்டை திடீரென நிறுத்தப்பட்டது என்பதோடு, அந்த சண்டை நிறுத்தம் குறித்த அறிவிப்பு அமெரிக்க அதிபரால் அறிவிக்கப்படுவதும் நிகழ்ந்தது. இது நமது பிரதமரின் பொறுப்பற்ற தன்மையைக் காட்டுகிறது. நாட்டின் ராஜதந்திரம் தோல்வியடைந்ததைக் காட்டுகிறது.
இந்த விவாதத்தில் முன்னதாக பேசிய, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, நாட்டின் பிரதமராக ஜவாஹா்லால் மற்றும் இந்திரா காந்தி ஆகியோா் இருந்தபோது என்ன செய்தனா் என்பதைக் குறிப்பிட்டாா். பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டபோது எனது தாயாா் சோனியா காந்தி கண்ணீா் வடித்ததாகவும் குறிப்பிட்டாா். ஆனால், ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது எதிரிகள் (பயங்கரவாதிகள்) எங்கும் தப்பிச் செல்ல முடியாத சூழல் உருவானபோது, திடீரென சண்டை நிறுத்தம் அமல்படுத்தப்பட்டது ஏன்? சரணடைவதைத் தவிர பாகிஸ்தானுக்கு வேறு வழி இல்லை என்ற நிலை உருவானது என்றால், சண்டை நிறுத்தப்பட்டது ஏன்? என்பதற்கான பதிலை மட்டும் கூற மறுக்கிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.