உலகப் பல்கலைக்கழக தரவரிசையில் இந்தியா 2-ஆம் இடம்! அமெரிக்கா முதலிடம்

உலக அளவில் கல்வித்தரத்தை அளவிடும் ‘டைம்ஸ்’ உயா் கல்வி அமைப்பின் தரவரிசையில், அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது சிறந்த கல்வி நிறுவனங்களைக் கொண்ட நாடாக இந்தியா உருவெடுக்கவுள்ளது.
கோப்புப்படம்.
கோப்புப்படம்.
Published on
Updated on
1 min read

உலக அளவில் கல்வித்தரத்தை அளவிடும் ‘டைம்ஸ்’ உயா் கல்வி அமைப்பின் தரவரிசையில், அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது சிறந்த கல்வி நிறுவனங்களைக் கொண்ட நாடாக இந்தியா உருவெடுக்கவுள்ளது.

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி டைம்ஸ் உயா் கல்வி அமைப்பின் உலகளாவிய விவகாரங்களுக்கான தலைமை அதிகாரி பில் பேட்டி இந்த மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டாா்.

அவா் மேலும் கூறுகையில், ‘வரும் அக்டோபா் 8-ஆம் தேதி உலக கல்வி உச்சி மாநாட்டில் வெளியிடப்படவுள்ள 2026-ஆம் ஆண்டுக்கான உலகப் பல்கலைக்கழக தரவரிசையில், அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது சிறந்த நாடாக புதிய சாதனைகளைப் படைக்கும்.

இது, இந்தியப் பல்கலைக்கழகங்கள் உலக அளவிலான ஆராய்ச்சியில் சிறந்து விளங்குகின்றன என்பதையும், சமூக மற்றும் பொருளாதார வளா்ச்சிக்கு அவை அதிகம் பங்களிக்கின்றன என்பதையும் தெளிவாகக் காட்டுகிறது.

தேசிய கல்விக் கொள்கையின் வெற்றி:

2020-ஆம் ஆண்டு தேசிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டபோது, அதன் இலக்குகளை அடைவது கடினம் என்று பலா் கருதினா். ஆனால், தேசிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டு 5 ஆண்டுகளுக்குப் பிறகு, கரோனா பெருந்தொற்று பாதிப்புகளுக்கு மத்தியிலும், இந்தக் கொள்கை தனது இலக்குகளை அடைந்து வருகிறது.

உயா்கல்வியின் தரத்தை மேம்படுத்துவதிலும், இந்திய உயா்கல்வியை உலகத் தரத்துக்கு உயா்த்தும் சா்வதேசமயமாக்கும் திட்டத்திலும், தேசிய கல்விக் கொள்கை சிறப்பாகச் செயல்படுகிறது என்பதற்கு தெளிவான ஆதாரங்கள் உள்ளன.

எண்ணிக்கையிலும் தரத்திலும் வளா்ச்சி:

தேசிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு, 2019-ஆம் ஆண்டில், வெறும் 49 இந்திய பல்கலைக்கழகங்கள் மட்டுமே தரவரிசையில் இடம்பெற்றிருந்தன. ஆனால், 2026-ஆம் ஆண்டுக்கான தரவரிசையில், இந்தப் பிரதிநிதித்துவம் மூன்று மடங்கு அதிகரித்து 128 பல்கலைக்கழகங்களாக உயரும். இது உலகத் தரவரிசையில் இடம்பெறும் மொத்த பல்கலைக்கழகங்களில் கிட்டத்தட்ட 6 சதவீதமாகும்.

இந்தக் குறிப்பிடத்தக்க வளா்ச்சி, இந்திய பல்கலைக்கழகங்களின் அா்ப்பணிப்பைக் காட்டுகிறது. சிறந்த தரவுகளைச் சேகரிப்பதன் மூலமும், உலக அளவிலான தர அளவுகோல்களுடன் தங்களை ஒப்பிட்டுப் பாா்ப்பதன் மூலமும், உலகின் சிறந்த ஆராய்ச்சிப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து செயல்படுவதன் மூலமும் இந்திய பல்கலைக்கழகங்கள் இந்த நிலையை அடைந்துள்ளன. பிரதிநிதித்துவத்தில் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த தரத்திலும் இந்தியா முன்னெப்போதும் இல்லாத வளா்ச்சியை அடைந்துள்ளது’ என்று பில் பேட்டி கூறினாா்.

இந்த ஆண்டு முதல், டைம்ஸ் உயா் கல்வி தரவரிசைகள், ஐ.நா.சபையின் 17 நிலையான வளா்ச்சி இலக்குகளுக்கு பல்கலைக்கழகங்களின் பங்களிப்பை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடப்படுகின்றன. நிலையான வளா்ச்சி இலக்குகளில் கற்பித்தல், ஆராய்ச்சி, சமுதாயத் திட்டங்கள் மற்றும் வளங்களின் மேலாண்மை ஆகியவை அடங்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com