
புது தில்லி: பாகிஸ்தான் விமானப் படை உள்கட்டமைப்பை தாக்க வேண்டாம் என இந்திய விமானிகளுக்கு உத்தரவிட்டது ஏன்? என்று மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியிருக்கிறார்.
ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக நாடாளுமன்றத்தில் சிறப்பு விவாதம் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.
இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலரும் ஆபரேஷன் சிந்தூர் பற்றி விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய நிலையில், தற்போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார்.
அவர் பேசுகையில், பாகிஸ்தான் விமானப் படை உள்கட்மைப்பை தாக்க வேண்டாம் என இந்திய விமானிகளுக்கு உத்தரவிட்டது ஏன்? இந்திய விமானப் படை விமானிகளின் கைகள் கட்டப்பட்டிருந்தன. இத்தகைய காட்டுப்பாடுகளின் காரணமாகவே இந்திய போர் விமானங்களை இழக்க நேரிட்டது. இதற்கு பிரதமர் மோடியே காரணம். இது விமானப்படையின் தவறு அல்ல மத்திய அரசின் தவறு.
பாகிஸ்தானை தொடர்புகொண்டு மோதலை தீவிரப்படுத்த விரும்பவில்லை என இந்தியா ஏன் தெரிவித்தது? பயங்கரவாத முகாம்களை தாக்கிய பிறகு இந்தியா இவ்வாறு கூறியது சரணடைந்ததற்கு ஒப்பாகும். அரசியல் ரீதியாக போர் நடத்தும் தீர்மானம் இல்லை என்பதை காட்டும் வகையில் இந்தியாவின் நடவடிக்கை இருந்துள்ளது என்றார்.
பாகிஸ்தான் விமானப் படை உள்கட்டமைப்பைத் தாக்க வேண்டாம் என இந்திய விமானிகளுக்கு உத்தரவிட்டது ஏன்? பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தப்போவதாக முன்கூட்டியே சொன்னது ஏன்? எதிரிகளை முழுமையாக வீழ்த்த வேண்டும். போருக்கு செல்லும்போது, ராணுவம் முழு வீச்சில் செயல்பட்டு, எதிரிகளை வீழ்த்த வேண்டும். ராணுவத்தின் கைகளை பின்புறம் கட்டி வைக்காதீர்கள்.
ஒருவருடன் கைகுலுக்கும்போதே அவர் இந்தியப் படையின் வீரர் என்பது தெரிந்துவிடும். ராணுவ வீரர்களை புலி எனக் குறிப்பிட்ட ராகுல், புலிகளுக்கு முழு சுதந்திரம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆபரேஷன் சிந்தூரின் போது இந்திய விமானப் படை விமானங்கள் வீழ்த்தப்பட்டது உண்மையே என்று பேசிய அவர், பிரதமரின் இமேஜை காக்கவே முழு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது என்றார்.
ஆபரேஷன் சிந்தூரின் போது ஒரு நாடு கூட பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவிக்கவில்லை. மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரின் வெளியுறவுக் கொள்கை தோல்வியடைந்துவிட்டது. சீனா - பாகிஸ்தான் இடையே உறவை உடைக்க முடியவில்லை. இந்தியாவுக்கு எதிராக சீனாவும் பாகிஸ்தானும் இணைந்து போரிட்டன. ஆனால் இந்தியாவுக்கு ஆதரவாக ஒரு நாடும் குரல் கொடுக்கவில்லை. முழுவதுமாக பாகிஸ்தானை போரில் வீழ்த்தியிருக்க வேண்டும்.
அடுத்த பயங்கரவாதத் தாக்குதல் நடந்தால் என்ன செய்வீர்கள்? மீண்டும் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவீர்களா? ஒவ்வொரு முறை பயங்கரவாதத் தாக்குதல் நடக்கும்போதெல்லாம் பாகிஸ்தானை தாக்குவீர்களா? இந்திய முப்படைகளுக்கும் முழு சுதந்திரம் அளிக்கப்பட்டிருக்க வேண்டும். போரில் பாகிஸ்தானை முழுமையாக வீழ்த்தியிருக்க வேண்டும். ஒட்டு மொத்த நாடும், எதிர்க்கட்சிகளும் போரின் போது மத்திய அரசின் பக்கம் இருந்தன.
பாகிஸ்தான் போரை தூண்டியதாக பாஜக அரசு கூறிவரும் நிலையில், அசீம் முனிருக்கு டிரம்ப் விருந்து அளித்துள்ளார். அது மட்டுமா? இந்தியா - பாகிஸ்தான் இடையே போரை நிறுத்தியதற்காக, அசீம் முனீரிடம் டிரம்ப் நன்றி கூறினார்.
போரில் பாகிஸ்தானுக்கு சீனா உதவியது. பாகிஸ்தான் - சீன விமானங்களை ஒருங்கிணைக்க ஒரு மையமே இருக்கிறது. சீனாவும் பாகிஸ்தானும் இணைந்திருப்பது இந்தியாவுக்கு மிகவும் ஆபத்தானது என்றும் ராகுல் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.