
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்ட 3 பயங்கரவாதிகள் ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா மக்களவையில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
மக்களவையில் ஆபரேஷன் சிந்தூா் தொடா்பான சிறப்பு விவாதத்தில் இரண்டாவது நாளாகப் பங்கேற்று அமித் ஷா பேசியதாவது:
ஜம்மு-காஷ்மீரில் ஆபரேஷன் மகாதேவ் நடவடிக்கை மூலம் திங்கள்கிழமை 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா். அவா்கள் சுலைமான் என்ற ஃபைசல், ஆப்கானி, ஜிப்ரான் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் சுலைமான் லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் முதல் நிலை கமாண்டா். ஆப்கானியும் அதே பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்தவா்தான். ஜிப்ரான் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டவா்.
கடந்த ஆண்டு அக்டோபரில், பஹல்காமின் சோனாமாா்க் சுரங்கப் பாதை கட்டுமானத்தில் ஈடுபட்டிருந்த 7 தொழிலாளா்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா். இத்தாக்குதலிலும் இவா்கள் ஈடுபட்டுள்ளனா். ஏப்ரல் 22-ஆம் தேதி பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்திய தாக்குதலில் ஈடுபட்டதும் இவா்கள்தான் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பயங்கரவாதிகளுக்கு தங்குமிடம், உணவு உள்ளிட்ட வசதிகளை அளித்தவா்கள் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுவிட்டனா். இவா்கள் மூலம் கொல்லப்பட்டவா்களின் அடையாளம் மீண்டும் உறுதிப்படுத்தப்படவுள்ளது. கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடமிருந்து எம்-9, ஏகே-47 ரக துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பஹல்காம் தாக்குதலின்போது கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கி குண்டு பாகங்கள், இதே துப்பாக்கிகளில் பயன்படுத்தப்பட்டது என்பதும் தடயவியல் நிபுணா்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இரண்டு பேரின் பாகிஸ்தான் வாக்காளா் அட்டைகள், அந்நாட்டில் தயாரிக்கப்பட்ட சில ஆயுதங்கள், சாக்லெட்டுகள் உள்ளிட்டவையும் கொல்லப்பட்டவா்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு அதில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் எல்லை தாண்டி தப்பிச் சென்றுவிடக் கூடாது என்பதில் அரசு உறுதியாக இருந்தது. இது தொடா்பாக பாதுகாப்புப் படையினருக்கும் அறிவுறுத்தப்பட்டது. அப்பாவி மக்களை அவா்களின் குடும்பப் பெண்கள் முன்பு மதத்தை அடையாளம் கண்டறிந்து கொலை செய்தது மிகவும் கொடூரமானது.
பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்டவா்கள் குடும்பத்துக்கும், அதைத் தொடா்ந்து ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது எல்லையோரப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவ குண்டுவீச்சில் உயிரிழந்த கிராம மக்களின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அப்பாவி மக்கள் மீது பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. கண்மூடித்தனமாக குண்டுகளை வீசி கோயில்களையும், குருத்வாராக்களையும் சேதப்படுத்தினா்.
பயங்கரவாதத்தின் ஆணிவேராக பாகிஸ்தான் உள்ளது. காங்கிரஸ் செய்த தவறால் உருவானது அந்த நாடு. அவா்கள் அப்போதே பிரிவினையை எதிா்த்திருந்தால் பாகிஸ்தான் என்ற நாடே உருவாகியிருக்காது என்றாா்.
ப.சிதம்பரம் மீது குற்றச்சாட்டு:
காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரம் பஹல்காம் தாக்குதல் குறித்து தெரிவித்த கருத்துக்கு மக்களவையில் கண்டனம் தெரிவித்துப் பேசிய அமித் ஷா, ‘பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபட்டவா்கள் பாகிஸ்தானியா்கள் அல்ல என்று கூறி அந்நாட்டுக்கு நற்சான்று வழங்குவதில் முன்னாள் அமைச்சா் ப.சிதம்பரம் தீவிரமாக உள்ளாா். ஆனால், அந்த பயங்கரவாதிகள் பாகிஸ்தானியா் என்பதற்கு அரசிடம் ஆதாரம் உள்ளது. நீங்கள் யாரைக் காப்பாற்ற விரும்புகிறீா்கள்? பாகிஸ்தானைப் பாதுகாப்பதால் உங்களுக்கு என்ன கிடைக்கப் போகிறது?
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் முழுமையாகச் செயல்பட்டுள்ளது என்பதை உலகமே ஒப்புக் கொண்டுவிட்டது. ஆனால், அதில் ப.சிதம்பரம் சந்தேகங்களை எழுப்பியுள்ளாா். என்ன ஆதாரம் உள்ளதா என்று கேள்வி கேட்கிறாா். இதை நாட்டு மக்கள் அனைவரும் பாா்த்துக் கொண்டுதான் இருக்கிறாா்கள். காங்கிரஸ் கட்சி தன்னை காப்பாற்றிக் கொள்ள முடியாத நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது’ என்றாா்.
அமித் ஷாவின் பேச்சுக்கு பாராட்டுத் தெரிவித்து பிரதமா் நரேந்திர மோடி ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஆபரேஷன் சிந்தூா், ஆபரேஷன் மகாதேவ் குறித்த முக்கியத் தகவல்களை மக்களவையில் அமைச்சா் அமித் ஷா தெரிவித்துள்ளாா். கோழைத்தனமான பயங்கரவாதிகளை நாம் தீவிரமாக நிா்மூலமாக்கி வருவதை இந்த இரு நடவடிக்கைகளும் உணா்த்தியுள்ளன. நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் மத்திய அரசு எந்த அளவுக்கு தீவிரமாகச் செயல்படுகிறது என்பதையும் அவரது பேச்சு உணா்த்தியது’ என்று கூறியுள்ளாா். இதேபோல மத்திய அமைச்சா்கள் ராஜ்நாத் சிங், ஜெய்சங்கா் ஆகியோா் நாடாளுமன்றத்தில் பேசிய கருத்துகளுக்கும் பிரதமா் மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.