
2004 - 2014 வரை அமாவாசை இருளாகவும், 2014 முதல் இன்று வரை பௌர்ணமி நிலவாகவும் இருப்பதாக ஜெ.பி.நட்டா உருவகப்படுத்தி ஒப்பிட்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை கடுமையாக விமர்சித்து மாநிலங்களவையில் பேசியுள்ளார்.
1947-க்கு பின் எந்தவொரு பிரதமரும் செய்யாததை பிரதமராக நரேந்திர மோடி செய்தார் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா தெரிவித்தாா்.
மாநிலங்களவையில் புதன்கிழமை நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூர் பற்றிய சிறப்பு விவாதத்தின்போது ஜெ.பி.நட்டா பேசியதாவது, "அரசியல் தலைமை என்பது மிக முக்கியமானது. ராணுவத்துக்கு உரிய அறிவுறுத்தல்களை இந்த தலைமையே வழங்குகிறது.
பொறுப்பான, தன்மையான, முற்போக்கான அரசுக்கும் தேவைக்கு ஏற்றாற்போல் அந்த தருணத்தில் செயல்படும் அரசுக்கும் இடையே வித்தியாசம் உள்ளது.
இன்னொரு விதமான அரசும் உள்ளது. செயல்திறன் இல்லாமல் எதற்கும் பெரிதாக எதிர்வினையாற்றாமல் பதிலளிக்காமல் செயல்படும் அரசு.
இதனை நாம் இரண்டு கட்டங்களாகப் பார்க்க வேண்டும்: 2004 முதல் 2014 வரை அதன்பின், 2014 முதல் 2025 வரை.
தில்லியில் அக்டோபர் 29, 2005-இல் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களில் - 67 பேர் கொல்லப்பட்டனர், வாரணாசியில் மார்ச் 7, 2006-இல் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களில் 28 பேர் கொல்லப்பட்டனர், மும்பையில் ஜூலை 11, 2006-இல் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களில் 209 பேர் கொல்லப்பட்டனர். மேற்கண்ட குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கு பின், எந்தவொரு நடவடிக்கையும் கடந்த ஆட்சிகளில் பெரிதாக எடுக்கப்படவில்லை. இதன்மூலம் அந்த அரசின் பொறுப்பற்ற தன்மை பிரதிபலிக்கிறது.
அப்போதைய அரசு பாகிஸ்தானுடன் மென்மையான போக்கையே கடைப்பிடித்தது. அழுத்தம் தரவேயில்லை.
அமாவாசை இருளைப் பற்றி அறிந்துகொண்டால்தான் பௌர்ணமி நிலவின் முக்கியத்துவத்தை நீங்கள் பாராட்டுவீர்கள். அதற்காகத்தான் கடந்தகால நிகழ்வுகளையெல்லாம் இப்போது குறிப்பிட்டுச் சொல்கிறேன்.”
"1947-க்கு பின் எந்தவொரு பிரதமரும் பயங்கரவாத விவகாரங்களில் எதிர்வினையாற்றியதில்லை. ஆனால், நீங்கள்(எதிர்க்கட்சிகள்) ‘பிரதமர் பேச வேண்டும்’ என்று வலியுறுத்துகிறீர்கள். பிரதமர் நரேந்திர மோடி பேசினால் உலகம் அதை கேட்க தயாராக இருக்கிறது. பாலகோட்டில் நடத்தப்பட்ட வான் வழி தாக்குதல்கல்ளுக்கு பின், பாலம் விமான் நிலையத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். அப்போது அவர் என்ன கூறினார் தெரியுமா? ‘பாகிஸ்தான் ஒரு பெரும் தவறை செய்துவிட்டது. இதற்கான விலையை அவர்கள் தந்தாக வேண்டும்’ என்று சொன்னார். இத்தகைய அரசியல் துணிச்சலைப் பற்றிதான் நாங்கள் பேசுகிறோம்” எனத் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.