
ஹைதராபாத்: செகுந்தராபாத்தில் செயல்பட்டு வந்த கருவுறுதல் மையத்தின் மீது, ஐவிஎஃப் செய்வதாகப் பணம் பெற்று மோசடி, வாடகைத் தாய் மோசடி, குழந்தைக் கடத்தல் என பல்வேறு புகார்கள் குவிந்து வருகிறது.
செகுந்திராபாத் உள்ளிட்ட மூன்று இடங்களில் செயல்பட்டு வந்த தனியார் கருவுறுதல் மையத்தின் மருத்துவர் டாக்டர் நம்ரதா உள்ளிட்டோர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், இது தொடர்பான செய்திகளைப் பார்த்து பலரும் காவல்நிலையங்களில் புகார் அளித்து வருகிறார்கள். இவர்கள் மீது 2020ஆம் ஆண்டு முதலே அங்கொன்றும் இங்கொன்றுமாக புகார்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், மருத்துவர் மற்றும் மருத்துவமனையில் பணியாற்றியவர்கள் வெறும் குழந்தைகளைக் கடத்தி, விற்பனையும் செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிலர், மருத்துவமனையில் ஐபிஎஃப் முறையில் குழந்தைப் பெற்றுக் கொள்ள லட்சக் கணக்கில் பணம் செலுத்தி, விந்தணு, கருமுட்டைகளை அளித்த பிறகு, அவர்களுக்கு மருத்துவமனை தரப்பில் எந்த விளக்கமும் கொடுக்காமல் விடப்பட்டதாகவும் புகார்கள் பதிவாகியிருக்கிறது.
குழந்தை இல்லாத தம்பதி சிலர் வாடகைத் தாய் முறையில் குழந்தைப் பெற்றக் கொள்ள 10 முதல் 20 லட்சம் வரை மருத்துவமனைக்குக் கட்டணம் செலுத்தியதாகவும், ஆனால், குழந்தையைக் கொடுக்கவில்லை என்றும் புகார் கொடுத்திருக்கிறார்கள்.
ஏழை கர்ப்பிணிகளிடம், குழந்தைப் பிறக்கும் முன்பே, பணத்தைக் கொடுத்து குழந்தையை விலைக்கு வாங்கிய கொடூரமும் நிகழ்ந்திருப்பதகவும், சில பெண்கள் குழந்தை பிறந்ததும் கொடுக்க மறுத்தால், குழந்தை கடத்திச் சென்றிருப்பதகாவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக, ஐவிஎஃப் முறையில், வாடகைத் தாய் மூலம் குழந்தைப் பெற்றுக் கொள்ள விரும்பிய தம்பதியை ஏமாற்றிய வழக்கின் மூலம், இந்த மருத்துவமனை செய்த முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஒரு ஏழைக் குடும்பத்திடமிருந்து பிறந்த குழந்தையை ரூ.90,000க்கு வாங்கி, அதனை நகரப் பகுதியில் வசிக்கும் தம்பதிக்கு, வாடகைத் தாய் மூலம் பிறந்த குழந்தை என்று ஏமாற்றி ரூ.35 லட்சம் பெற்ற சம்பவம் குறித்து காவல்துறை விசாரிக்கத் தொடங்கியது.
அதாவது, தம்பதிக்கு, வாடகைத் தாய் மூலம் அவர்களது விந்தணு, கருமுட்டையைக் கொண்டு குழந்தையைப் பெற்றுக்கொடுப்பதாக உறுதி அளித்த மருத்துவமனை, அவ்வாறு செய்யாமல், ஏழைப் பெண்ணிடமிருந்து குழந்தையை வாங்கி, குழந்தையில்லாத இந்தத் தம்பதிக்குக் கொடுத்து ஏமாற்றியிருக்கிறது. இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான இரண்டு மருத்துவர்கள் உள்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு அளிக்கப்பட்ட உரிமம் ரத்து செய்யப்பட்டது. இந்தக் கும்பல் நடத்திய வந்த மூன்று மருத்துவமனைகளும் மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளன.
கைதான மருத்துவர் மீது ஏற்கனவே, அமெரிக்க தம்பதி வாடகைத் தாய் முறையில் பெற்ற குழந்தை, அவர்களது குழந்தை இல்லை என்பதை மரபணு பரிசோதனை மூலம் கண்டுபிடிக்கப்பட்டு வழக்குத் தொடரப்பட்ட நிலையில், கடந்த ஐந்து ஆண்டுகள் மருத்துவமனையின் உரிமம் ரத்து செய்யப்பட்டதும், இதுபோன்று மற்றொரு வழக்கிலும் அவரது பெயர் இடம்பெற்றிருந்ததும் தற்போது தெரிய வந்துள்ளது.
இவர்கள் பெயரில் ஏற்கனவே மூன்று இடங்களில் பத்து வழக்குகள் பதிவாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த செய்திகளைப் பார்த்து ஏமாற்றப்பட்ட பலரும் காவல்நிலையங்களில் புகார் அளித்து வருகிறார்கள்.
இதையும் படிக்க.. செயற்கை நுண்ணறிவால் காத்திருக்கும் பயங்கர ஆபத்து: ஜெஃப்ரி ஹிண்டன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.