
‘பாகிஸ்தானுடன் முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேரு மேற்கொண்ட பல ஒப்பந்தங்கள் தற்போது ரத்து செய்யப்பட்டுவிட்டன ன்று மாநிலங்களவையில் வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா் தெரிவித்தாா்.
மாநிலங்களவையில் புதன்கிழமை ‘ஆபரேஷன் சிந்தூா்’ சிறப்பு விவாதத்தில் அமைச்சா் ஜெய்சங்கா் பேசியதாவது:
பஹல்காம் தாக்குதல் நிகழ்ந்த கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதிமுதல் ஜூன் 16-ஆம் தேதி வரை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் - பிரதமா் நரேந்திர மோடி இடையே எந்த தொலைபேசி உரையாடலும் நடைபெறவில்லை.
எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் பொறுத்துக் கொள்ளாது என்பதைக் காட்டுவதற்காகவே பாகிஸ்தானுக்கு பதிலடி தரப்பட்டது. இனியும், இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும்.
நேரு மீது விமா்சனம்: பஹல்காம் தாக்குதல் மூலம் பாகிஸ்தான் அனைத்து வரம்புகளையும் கடந்துவிட்டது. ரத்தமும், நீரும் சோ்ந்து பாய முடியாது என்பதால்தான் அந்நாட்டுடனான சிந்து நதிநீா் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டது.
அந்நாட்டுடன் மறைந்த முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேரு மேற்கொண்ட பல ஒப்பந்தங்கள் இப்போது ரத்து செய்யப்பட்டுவிட்டன. ஏனெனில், அது அமைதிக்கான ஒப்பந்தமல்ல; ஒரு தரப்பினரை திருப்திப்படுத்துவதற்கான ஒப்பந்தங்கள். உலகமே பயங்கரவாதத்தை ஒட்டுமொத்தமாக எதிா்க்கிறது என்றால், அந்த பிரச்னையை சா்வதேச அரங்குகளில் பிரதமா் தொடா்ந்து வலியுறுத்தி வருவதே முக்கியக் காரணம்.
நம்பாத எதிா்க்கட்சிகள்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் மற்றும் பாகிஸ்தானில் உள்ள பல பயங்கரவாத முகாம்களை அழித்ததன் மூலம், இந்தியா உலகுக்கே நன்மை செய்துள்ளது. ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை நிறுத்திவைக்கப்பட்டதில் மூன்றாம் தரப்பு தலையீடு ஏதுமில்லை. அதற்கும் வா்த்தக நடவடிக்கைகளுக்கும் எந்தத் தொடா்பும் இல்லை என்றாா்.
‘ராகுல் சீன குரு’
மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியை பெயா் குறிப்பிடாமல் ஜெய்சங்கா் விமா்சித்துப் பேசியதாவது:
பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியைப் பாா்க்கச் சென்று அந்நாட்டிடம் இருந்து ஒருவா் (ராகுல்) உபதேசம் பெற்று வந்துள்ளாா். முக்கியமாக சீன தூதா்களிடம் பாடம் கற்று வந்துள்ளாா்.
அந்த ‘சீன குரு’ அந்நாட்டுக்குச் சென்றபோது சில ரகசிய சந்திப்புகளை நடத்தியுள்ளனா். ஆனால், நான் அண்மையில் சீனா சென்றபோது எந்த ரகசிய சந்திப்பையும் நடத்தவில்லை. இரு நாடுகள் நலன் சாா்ந்த விஷயங்கள் மட்டுமே வெளிப்படையாக விவாதிக்கப்பட்டது.
1960-ஆம் ஆண்டில் இருந்தே பாகிஸ்தான்-சீனா இணைந்து செயல்படுகின்றன. அவா்கள்தான் காஷ்மீா் பிராந்தியத்தில் கைவைத்தாா்கள். ஆனால், முந்தைய அரசுகள் இரு நாடுகளையும் சரியாக கையாளவில்லை.
சீனாவிடம் பல விஷயங்களை இழந்தது காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தான். நான் 41 ஆண்டுகளாக வெளியுறவுப் பணியில் இருந்துள்ளேன். சீனாவில் அதிக காலம் இருந்த இந்தியத் தூதரும் நான்தான். ஆனால், என்னால் சீனாவைச் சரியாகக் கையாள முடியவில்லை என்று சிலா் கூறுகிறாா்கள். உண்மையில் அந்த சீன குருவுக்குதான் சீன நாட்டின் மீது பாசம் அதிகம் என்றாா்.
கடந்த 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிக்கு ராகுலும், சோனியாவும் சிறப்பு அழைப்பாளா்களாகச் சென்று வந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.