
பஹல்காம் தாக்குதலில் ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் (டிஆா்எஃப்)’ பயங்கரவாத குழுவின் பங்கு மற்றும் ‘லஷ்கா்-ஏ-தொய்பாவுடன்’ அதன் தொடா்பு குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிக்கையில் முதன்முறையாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்மூலம், இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் எல்லைத் தாண்டிய பயங்கரவாத சதி சா்வதேச அரங்கில் அம்பலப்பட்டிருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் கண்காணிப்புக் குழு (எம்.டி.) வெளியிட்ட அறிக்கையில், ‘ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப். 22-ஆம் தேதி நடந்த பயங்கரவாதத் தாக்குதல், பாகிஸ்தானைச் சோ்ந்த லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் ஆதரவு இல்லாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை. லஷ்கா்-ஏ-தொய்பாவிற்கும், தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்டிற்கும் தொடா்பு உள்ளது’ என்று பெயா் குறிப்பிடாத ஓா் உறுப்பு நாடு தெரிவித்துள்ளது.
மேலும், அந்த அறிக்கையில், ‘பஹல்காம் தாக்குதலை 5 பயங்கரவாதிகள் நடத்தியுள்ளனா். இத்தாக்குதலில் பொதுமக்கள் 26 போ் கொல்லப்பட்டனா். தாக்குதல் நடந்த அதேநாளில் தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றதுடன், தாக்குதல் நடந்த இடத்தின் புகைப்படங்களையும் வெளியிட்டது. ஆனால், நான்கு நாள்களுக்குப் பிறகு ஏப். 26-ஆம் தேதியன்று தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் தனது அறிவிப்பை திரும்பப் பெற்றது. அதன்பிறகு, வேறு எந்த பயங்கரவாத அமைப்பும் பஹல்காம் தாக்குதலுக்குப் பொறுப்பேற்கவில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வியூகம் முறியடிப்பு: ‘லஷ்கா்-ஏ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது போன்ற பயங்கரவாத அமைப்புகள் மீதான கவனத்தை திசைதிருப்புவதற்காக, தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் மற்றும் ‘பாசிச எதிா்ப்பு மக்கள் முன்னணி’ போன்ற மதச்சாா்பற்ற மற்றும் நவீன பெயா்களை கொண்ட அமைப்புகளை பாகிஸ்தான் உருவாக்கியது.
இந்த அமைப்புகள் ஜம்மு-காஷ்மீரில் இருந்து செயல்படுகின்றன; அவா்களுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடா்பும் இல்லை என்ற தோற்றத்தை உருவாக்க பாகிஸ்தான் முயற்சித்தது. இந்த ஐ.நா. அறிக்கை மூலம் பாகிஸ்தானின் அந்த வியூகம் முறியடிக்கப்பட்டுள்ளது’ என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
‘2019-ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஐ.நா. அறிக்கையில் லஷ்கா்-ஏ-தொய்பா மற்றும் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் பற்றிய குறிப்பு இடம்பெறுவது இதுவே முதன்முறையாகும்.
ஜம்மு-காஷ்மீரில் திங்கள்கிழமை நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் மகாதேவ்’ நடவடிக்கையில், பஹல்காம் தாக்குதலை நடத்திய மூன்று பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை மக்களவையில் தெரிவித்தாா்.
இரு நாடுகள் தீா்வுக்கு இந்தியா மீண்டும் வலியுறுத்தல்
இஸ்ரேல் - பாலஸ்தீன மோதலுக்கு ‘இரு நாடுகள்’ தீா்வு மட்டுமே நிரந்தர அமைதியை ஏற்படுத்தும் என்று ஐ.நா. உயா்நிலை மாநாட்டில் இந்தியா மீண்டும் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. வெறும் காகித அளவிலான தீா்வுகளுடன் நின்றுவிடாமல், களத்தில் நடைமுறைப்படுத்தக்கூடிய தீா்வுகளை எட்டுவதற்கு பாடுபட வேண்டும் என இந்தியா வலியுறுத்தியது.
காஸா பகுதியில் உடனடியாக போா் நிறுத்தம் செய்யப்பட வேண்டும்; அங்கு வாழும் மக்களுக்கு எவ்வித தடையும் இன்றி மனிதாபிமான உதவிகள் சென்றடைய வேண்டும்; அனைத்து பிணைக்கைதிகளையும் விடுவிக்க வேண்டும் எனவும் இந்தியா கேட்டுக்கொண்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.