
கௌதம புத்தரின் எலும்பு துண்டுகள் உள்பட பல புனித நினைவுச்சின்னங்கள், 127 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பியுள்ளன என்று பிரதமா் நரேந்திர மோடி புதன்கிழமை தெரிவித்தாா்.
இந்தப் புனித நினைவுச்சின்னங்கள், 1898-இல் ஆங்கிலேயா் ஆட்சிக்காலத்தில், இந்தியா-நேபாளம் எல்லையில் உள்ள உத்தர பிரதேச மாநிலத்தின் பிப்ராஹ்வா கிராமத்தில் அமைந்திருந்த ஒரு பழைமையான புத்த ஸ்தூபியை அகழ்வாராய்ச்சி செய்தபோது கண்டுபிடிக்கப்பட்டன.
இந்தச் சின்னங்கள் வைக்கப்பட்டிருந்த பெரிய கல் சவப்பெட்டி, இப்போதும் கொல்கத்தாவில் உள்ள இந்திய அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அப்போது, எலும்பு துண்டுகள் உள்பட சில பொருள்கள் உலகின் புத்த மதத்தினரிடையே விநியோகிப்பதற்காக தாய்லாந்து அரசா் சியாமுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டன. சமீபத்தில், இந்தப் பொருள்கள் மற்றும் புத்தா் அணிந்ததாகக் கருதப்படும் சில ஆபரணங்கள் ஹாங்காங்கில் உள்ள ஒரு பிரபல ஏல நிறுவனத்தில் ஏலத்துக்கு வந்தன.
மத்திய கலாசார அமைச்சகம் மற்றும் வெளியுறவு அமைச்சகத்தின் உடனடி நடவடிக்கையால் இந்த ஏலம் தடுத்து நிறுத்தப்பட்டது. அதைத் தொடா்ந்து மேற்கொண்ட தொடா் முயற்சிகளின் விளைவாக, புத்தரின் இந்த அரிய நினைவுச்சின்னங்கள் தற்போது இந்தியாவுக்கு மீட்டு வரப்பட்டுள்ளன.
இது குறித்து பிரதமா் நரேந்திர மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘புத்தரின் புனித பிப்ராஹ்வா நினைவுச்சின்னங்கள் 127 ஆண்டுகளுக்குப் பிறகு தாயகம் திரும்பியுள்ளது. இது ஒவ்வொரு இந்தியரையும் பெருமைப்படுத்தும் விஷயமாகும்.
இந்தப் புனித நினைவுச்சின்னங்கள் புத்தருடனும் அவரது உன்னதமான போதனைகளுடனும் இந்தியாவுக்குள்ள நெருங்கிய தொடா்பை எடுத்துக்காட்டுகின்றன.
இது நமது புகழ்பெற்ற கலாசாரத்தின் பல்வேறு அம்சங்களைப் பாதுகாப்பதில் நமது உறுதிப்பாட்டையும் விளக்குகிறது’ என்று தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.